கோலாலம்பூர், செப்.3 : அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை மலேசியா வேலைக்காக அழைத்து வரவுள்ளதாக வெளியான தகவலை மனிதவள அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான கோரிக்கைகள் ஒவ்வொரு தொழில்துறையையின் தேவையைக் கருத்தில்கொண்டே பரிசீலிக்கப்படும்.
இதில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் தேவையுள்ள துறைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் முதலில் பொருளாதார அமைச்சினால் 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் உச்சவரம்புக்குள் மதிப்பீடு செய்யப்படும்.
அதன் பின்னர், தேவையான பட்சத்தில் அந்த விவகாரம் அமைச்சரவையின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் மனிதவள அமைச்சர் விளக்கினார்.
மலேசியா சுமார் 2 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை கட்டம் கட்டமாக ஆறு மாத காலப்பகுதியில் நாட்டுக்குள் அழைத்து வரவுள்ளதாகவும், அந்த நடவடிக்கை இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் வங்காளதேச அமைச்சர் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அதை வங்காளதேச அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகக் கருதக்கூடாது என்று அரசாங்கப் பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
எனவே, வங்காளதேசத் தொழிலாளர்களை பெருமளவில் மலேசியாவுக்கு அழைத்து வருவதற்கான புதிய முடிவு எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை.







