ஜோகூர் பாரு, ஜூலை 10- எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், தகுதிபெற்ற வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள ஊழியர்கள் அனைவரும், தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற அவர்களுக்குப் போதுமான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று அனைத்து முதலாளிகளையும் தேர்தல் ஆணையம் (SPR) கேட்டுக்கொண்டுள்ளது.
ஊழியர்கள் தங்களின் வாக்களிக்கும் கடமையை ஆற்றுவதற்காகச் செல்லும் நேரத்தில், அவர்களின் ஊதியத்தை குறைக்கக் கூடாது மற்றும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளதாக அதன் செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இட்ருஸ் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊழியர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்க மறுக்கும் அல்லது அவர்கள் வாக்களிக்கச் செல்வதைத் தடுக்கும் எந்தவொரு முதலாளியும் சட்டப்படி குற்றம் இழைத்தவராகக் கருதப்படுவார் என்று கைருல் ஷஹ்ரில் எச்சரித்துள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு 5,000 ரிங்கிட்டிற்கு மிகாமல் அபராதம் அல்லது ஓராண்டுக்கு மிகாத சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.







