கோலாலம்பூர், அக். 28 — மலேசியாவில் இவ்வாண்டு எரிபொருள் மானியம் மூலம் கிடைக்கும் மொத்த சேமிப்பு, பரிவர்த்தனைகள், வாராந்திர சந்தை விலைகள், அந்நியச் செலாவணி விகிதங்கள் மற்றும் எரிபொருள் பயன்பாட்டு அளவுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, ஆண்டிறுதியில் இறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
BUDI95 எரிபொருள் மானிய திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு RM2.5 பில்லியன் முதல் RM4 பில்லியன் வரை நிதிச் சேமிப்பை அரசு எதிர்பார்ப்பதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
மானியங்களைத் தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கும் நடவடிக்கையின் மூலம், வெளிநாட்டினர் மற்றும் தகுதியற்ற பயனாளர்களுக்கு வழங்கப்படும் மானியங்களில் ஏற்படும் கசிவுகளைக் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்பு நோக்கங்களுக்கு ஏற்ப எரிபொருள் கொள்முதல்களைக் கட்டுப்படுத்துவதும் இந்தச் சேமிப்புக்குப் பங்களிக்கும் என்றார் அவர்.
இவ்வாண்டு முழுவதும் எரிபொருள் மானியங்களின் மூலம் கிடைத்த உண்மையான சேமிப்புத் தொகை எவ்வளவு என்பதை நிதியமைச்சர் தெரிவிக்க வேண்டும் என பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஃபவ்வாஸ் முகமட் ஜான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்கள், நாட்டின் நிதிநிலைமை மற்றும் பொதுமக்களின் கருத்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் தனது கொள்கைகளைச் சீரமைத்து வருவதாக அமீர் ஹம்சா தெரிவித்தார்.

எரிபொருள் விநியோக நிலைமை தற்போது மேலும் சீரடைந்துள்ளது. அதனால், மாதாந்திர மானியச் செலவினம் சுமார் RM4 பில்லியனாக இருப்பதை கருத்தில் கொண்டு, BUDI95 திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான மாதாந்திரத் தகுதி வரம்பு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்பட்டது.
முன்னதாக, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவிய மோதல்களின் தாக்கத்தை எதிர்கொள்ள மாதாந்திரத் தகுதி வரம்பு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







