கூச்சிங்: போலி பங்கு முதலீட்டு திட்டத்தில் சிக்கிய முதியவர் RM9.08 மில்லியனை இழந்தார்

15 ஜூன் 2026, 1:35 AM
கூச்சிங்: போலி பங்கு முதலீட்டு திட்டத்தில் சிக்கிய முதியவர் RM9.08 மில்லியனை இழந்தார்

கூச்சிங், ஜூன் 15 – பங்குச் சந்தை மற்றும் போலி ஐபிஓ (IPO) எனப்படும் பங்கு முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட 79 வயது முதியவர் ஒருவர், 9.081 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட கூச்சிங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அலெக்சன் நாகா சாபு, கடந்த ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட முதியவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், செயலி ஒன்றின் மூலம் இந்த முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார்.

அந்த முதலீட்டின் மூலம் மிகக் குறுகிய காலத்தில் பல மடங்கு கூடுதல் லாபம் ஈட்டலாம் எனச் சந்தேக நபர் முதியவருக்கு ஆசைவார்த்தைகளைக் கூறியதாக நாகா சாபு விவரித்தார்.

அந்தப் போலியான வாக்குறுதிகளை உண்மையென நம்பிய முதியவர், சந்தேக நபர் கூறிய ஒன்பது வெவ்வேறான வங்கிச் கணக்குகளுக்கு 27 முறை பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளார். அவ்வாறு அவர் பரிமாற்றம் செய்த மொத்தத் தொகை 9.081 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

பணத்தைச் செலுத்திய பின்னர், அந்தச் செயலியின் திரையில் தனக்குக் கிடைத்த லாபத் தொகை காட்சியளித்த போதிலும், முதியவரால் வெறும் ஆயிரம் ரிங்கிட்டை மட்டுமே திரும்பப் பெற முடிந்துள்ளது.

அதன் பின்னர், கணக்கில் காட்டிய மீதமுள்ள முதலீட்டுத் தொகையையும் லாபத்தையும் அவரால் மீட்டெடுக்க முடியாமல் போனதைத் தொடர்ந்தே, தான் மிக மோசமாக ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த மோசடிச் சம்பவம் குறித்து காவல்துறை தற்போது குற்றவியல் சட்டப் பிரிவு 420 கீழ் ஏமாற்று வேலைக்காக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.