கோத்தா டாமன்சாரா தரவு மையப் பிரச்சனை அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும் - டத்தோஸ்ரீ ரமணன்

18 ஜூலை 2026, 8:17 AM
கோத்தா டாமன்சாரா தரவு மையப் பிரச்சனை அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும் - டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர், ஜூலை 18: கோத்தா டாமன்சாரா குடியிருப்புப் பகுதியில் அமையவிருக்கும் புதிய தரவு மையம் (Data Centre) தொடர்பான திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்புகளையும் கவலைகளையும் நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் தரவு மையங்களை அமைப்பது குறித்து மிகவும் விரிவான மற்றும் முறையான வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் வகுப்பது பற்றி விவாதிப்பதற்காகவே இந்த விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முதலீடுகளுக்கும் அல்லது மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தாம் எதிரானவர் அல்ல என்று சுட்டிக்காட்டிய ரமணன், அதே வேளையில் ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டமும் முறையான ஆய்வுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனான கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்றார்.

மேலும், இந்தத் தரவு மையத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த புதன்கிழமை (ஜூலை 15) பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மேயரிடம் தாம் அதிகாரப்பூர்வ ஆட்சேபனைக் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளதாகவும், இருப்பினும் அது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப்பதிலும் கிடைக்கவில்லை என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

குடியிருப்பாளர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, சுங்கை பூலோ நாடாளுமன்றச் சேவை மையம் இத்திட்டம் குறித்த தெளிவான புரிதலைப் பெறுவதற்காக ஆரம்பக்கட்ட ஆய்வுகளையும் மதிப்பீடுகளையும் மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் தரவு மையம் அமையவிருக்கும் இடத்தின் பொருத்தம், பொதுமக்களின் நல்வாழ்வு, தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவை இதில் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய முக்கியக் கூறுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

அதே வேளையில், இந்தத் முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து தங்களின் சேவை மையத்திற்கு முன்னதாக எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை; கோத்தா டாமன்சாரா மக்களின் நலன் சார்ந்த எந்தவொரு கலந்துரையாடல்களிலும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்றும் ரமணன் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் மக்களைப் பாதிக்கக்கூடிய இத்தகைய பெரிய அளவிலான திட்டங்கள் அனைத்தும், அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.