ஷா ஆலாம், அக். 28 — மின்-வாடகை வாகன (e-hailing) ஓட்டுநர்களுக்கான அதிகரித்து வரும் காப்புறுதிக் கட்டணங்களைக் குறைத்து, மலிவான பாதுகாப்புத் திட்டத்தை வழங்கும் நோக்கில், பயணத் தூரத்தின் அடிப்படையில் காப்புறுதி மற்றும் தகாஃபுல் பாதுகாப்பை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் இதனைத் தெரிவித்தார். இத்திட்டம், ஒவ்வொரு ஓட்டுநரும் பயணிக்கும் தூரம் மற்றும் அவரவர் எதிர்கொள்ளும் இடர் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும் என அவர் கூறினார்.

மின்-வாடகை வாகன ஓட்டுநர்களின் தற்போதைய காப்புறுதி மற்றும் தகாஃபுல் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை ஆராய்வதற்காக மலேசிய தேசிய வங்கி (BNM) அமைத்த பல்வேறு அரசாங்க அமைப்புகளை உள்ளடக்கிய பணிக்குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முன்மொழிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
மின்-வாடகை வாகன ஓட்டுநர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் காப்புறுதிப் பாதுகாப்பின் வரம்பு மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துவதும் பரிந்துரைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, பாக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஹொங் பின் எழுப்பிய கேள்விக்கு நேற்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தபோது அமைச்சர் இவ்விவரங்களை வெளியிட்டார்.
அதிகரித்து வரும் மின்-வாடகை வாகனக் காப்புறுதி மற்றும் தகாஃபுல் தவணைக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், ஓட்டுநர்களுக்கான சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கிடையில், காப்புறுதிச் செலவுகள் மின்-வாடகை வாகனத் தளங்களை இயக்கும் நிறுவனங்கள், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இடையே பகிர்ந்துகொள்வதற்கான வழிமுறையை அறிமுகப்படுத்துவதும் பரிசீலனையில் உள்ளதாக லோக் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பான வாகன ஓட்டும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகத் தொலைத்தொடர்பு மற்றும் வாகனத் தரவுகளின் அடிப்படையில் செயல்படும் தெலிமேட்டிக்ஸ் (telematics) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காப்புறுதிக் கோரிக்கைகளைச் சரிபார்ப்பதற்கும், ஓட்டுநர்களின் பாதுகாப்பு நிலைகளைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கும் மின்-வாடகை வாகனத் தள நிறுவனங்களுக்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இடையிலான தரவுப் பகிர்வை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், போக்குவரத்து அமைச்சு (MOT), மலேசிய தேசிய வங்கி, தரைவழிப் பொதுப் போக்குவரத்து முகமை (APAD), சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), தொழில்துறைப் பிரதிநிதிகள் மற்றும் மின்-வாடகை வாகன ஓட்டுநர் சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, நீண்டகால அடிப்படையில் காப்புறுதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கூறினார்.
மேலும், விபத்துகளின்போது ஏற்படக்கூடிய காயங்கள் அல்லது சொத்துச் சேதங்களுக்கு எதிராக ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் மூன்றாம் தரப்பினரைப் பாதுகாக்க, 1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 90(1)-இன் கீழ் வாகனக் காப்புறுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக லோக் நினைவூட்டினார்.
மின்-வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, 1969ஆம் ஆண்டின் ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2017ஆம் ஆண்டின் சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2025ஆம் ஆண்டின் கிக் தொழிலாளர் சட்டம் ஆகியவற்றின் கீழ் நிர்வகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.






