ஜாலூர் சிலாங்கூர் திட்டம்: குடியிருப்பாளர்களுக்கு இடமாற்ற ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்து

28 அக்டோபர் 2026, 3:22 AM
ஜாலூர் சிலாங்கூர் திட்டம்: குடியிருப்பாளர்களுக்கு இடமாற்ற ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்து

ஷா ஆலாம், அக். 28 — சிலாங்கூரின் 2026–2035 சாலை மற்றும் நெடுஞ்சாலை வியூகத் திட்டமான ‘ஜாலூர் சிலாங்கூர்’ (JALUR Selangor) மூலம் புதிய நகர்ப்புற மேம்பாட்டுப் பகுதிகளை உருவாக்குவதற்காக இடம்பெயர வேண்டிய குடியிருப்பாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் (UKM) வணிகத் தொழில்துறை ஆலோசகர் மனோகரன் மொட்டையன் இதனைத் தெரிவித்தார்.

இடம்பெயர வேண்டிய மக்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவது, அவர்களின் இடமாற்ற நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாகத் தங்களது குடும்பத்தினருடன் ஒரே பகுதியில் வசித்து வரும் மக்கள், அந்தச் சூழலைவிட்டு வேறொரு இடத்திற்குச் செல்லத் தயக்கம் காட்டக்கூடும். இதனால், இடமாற்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

“புதிய குடியிருப்புத் திட்டங்கள் வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும். அல்லது, குடியிருப்பாளர்கள் அங்கு தங்களது சொந்தத் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும்,” என அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

புதிய குடியிருப்புப் பகுதிகளில் சிறந்த போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே வசித்து வரும் சுற்றுச்சூழலில் மக்கள் கொண்டுள்ள பிணைப்பும் வசதியும் அவர்களை இடம்பெயர்வதிலிருந்து தயங்கச் செய்யலாம் என மனோகரன் விளக்கினார்.

இதற்கிடையில், ஜாலூர் சிலாங்கூர் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் சாலை வலையமைப்பையும் போக்குவரத்து அணுகலையும் மேம்படுத்தி, இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத நிலப்பகுதிகளை மேம்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, சாலை இணைப்புகள் மேம்படுத்தப்படுவதன் மூலம் குறைவாக அபிவிருத்தி செய்யப்பட்ட பகுதிகளை எளிதில் சென்றடைய முடிவதுடன், புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் வாய்ப்புகள் உருவாகும் என அவர் கூறினார்.

எனினும், இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடும், செலவினங்களைத் திறமையாகவும் வெளிப்படையாகவும் நிர்வகிக்கும் நடைமுறைகளும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

“இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி கிடைக்கப்பெற்றால், சிலாங்கூர் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமான அபிவிருத்தி மாநிலமாகத் திகழும் வாய்ப்பு உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

மொத்தம் 77 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஜாலூர் சிலாங்கூர் திட்டத்தை, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அறிவித்தார். இத்திட்டத்தில் 115 சாலை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சிலாங்கூரின் சாலை வலையமைப்பை வலுப்படுத்துவது, வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளுக்கான போக்குவரத்து அணுகலை மேம்படுத்துவது, அத்துடன் சமூகங்களுக்கும் பொருளாதார நடவடிக்கைகள் நடைபெறும் மையங்களுக்கும் இடையிலான இணைப்புகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.