சூப்பர் எல்-நினோ : 2027 ஜனவரி இறுதி முதல் மார்ச் வரை கடும் வெயில், வறண்ட வானிலை

27 அக்டோபர் 2026, 1:55 PM
சூப்பர் எல்-நினோ : 2027 ஜனவரி இறுதி முதல் மார்ச் வரை கடும் வெயில், வறண்ட வானிலை

கோலாலம்பூர், அக்.27- எதிர்வரும் 2026/2027 வடகிழக்கு பருவமழைக் காலத்தின் இறுதிக்கட்டப் பகுதியான, குறிப்பாக அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், மலேசியா வழக்கத்தை விட மிக கடுமையான வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மழைப்பொழிவு குறைய வழிவகுக்கும் 'சூப்பர் எல் நினோ' (Super El Nino) காலநிலை மாற்றத்தின் தாக்கமே இதற்கு முக்கிய காரணமாகும்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தேசிய வானிலை மற்றும் நிலநடுக்க செயல்பாட்டு மையத்தின் மூத்த இயக்குனர் மக்ருன் ஃபாத்லி முகமட் ஃபஹ்மி இன்று பெர்னாமா தொலைக்காட்சியின் 'ஃபோகஸ் 15' (Fokus 15) நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தற்போதைய சூழலில் எல் நினோ நிகழ்வு ஒரு வலுவான கட்டத்தில் இருப்பதாகவும், இது இந்த ஆண்டின் இறுதி மற்றும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இன்னும் தீவிரமடைந்து 'மிகவும் வலுவான' அல்லது 'சூப்பர் எல் நினோ' நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் மழைப்பொழிவு குறைந்து வெப்ப அலைகள் மற்றும் கடுமையான வறட்சி ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், இன்று முதல் தொடங்கும் 2026/2027 வடகிழக்கு பருவமழையின் ஆரம்பக்கட்டத்தில், குறிப்பாக இந்த நவம்பர் முதல் 2027 ஜனவரி வரையிலான காலகட்டத்தில், மூன்று முதல் ஐந்து முறை நீடித்த கனமழை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆரம்பக்கால கனமழையினால் நாட்டின் கிழக்குக் கரை மாநிலங்களான கிளந்தான், திராங்கானு, பகாங் மற்றும் ஜொகூர் மாநிலத்தின் கிழக்குப்பகுதிகளில் கடுமையான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும்.

எனவே, வெள்ள அபாயப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பருவமழையின் ஆரம்பக்கட்டத்தில் கனமழை குறித்தும், அதே வேளையில் பருவமழையின் இறுதிக்கட்டத்தில் ஏற்படவிருக்கும் கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்தும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மக்ருன் அறிவுறுத்தினார்.

வானிலை ஆய்வுத் துறை 24 மணி நேரமும் வானிலை மாற்றங்களைக் கண்காணித்து வருவதாகவும், தேவைப்படும் போது கனமழை எச்சரிக்கைகளை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து வரும் அண்மைக்கால வானிலை தகவல்களைப் பின்தொடர வேண்டும் என்றும், வெள்ளம் ஏற்பட்டால் அதிகாரிகளின் வெளியேற்ற உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.