ஷா ஆலம், அக்டோபர் 8 - மிகக் கடுமையான ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) நிகழ்வினால் நீண்ட கால வெப்பமான வானிலை ஏற்பட்டாலும், சிலாங்கூர் மாநிலத்தின் சுத்திகரிக்கப்படாத நீர் கையிருப்பு 3 முதல் 9 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்குமென மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கடந்த மாதம் வரையிலான கண்காணிப்பின் அடிப்படையில், மாநிலத்தின் சுத்திகரிக்கப்படாத நீர் கையிருப்பு இன்னும் பாதுகாப்பான நிலையிலேயே உள்ளது என்று அவர் கூறினார்.
" கடந்த மாதம் வரை நான் கண்காணித்ததன் படி, நாம் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் அதிகபட்சம் ஒன்பது மாதங்கள் வரை தாக்குப் பிடிக்க முடியும். அதாவது ஆறு மாதங்கள் வரை நீடித்தால் கூட அது மிகவும் பாதுகாப்பானது.
அக்டோபர் பாதியில் பருவமழை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, எனவே மழைக்காலம் தொடங்கும்," என்று இன்று இங்கு நடைபெற்ற 'மதானி-மக்கள் நலக் காப்பீட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இருப்பினும், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அமிருடின் கூறினார்.
ஏனெனில், அக்காலக்கட்டத்தில் வெப்பமான வானிலை மற்றும் மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டு, அது சுத்திகரிக்கப்பட்ட நீர் கையிருப்பை நேரடியாகப் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"எனவே, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலம் கோடைகாலத்தின் தொடக்கமாகும். அந்த நேரத்தில் நாம் வெப்பமான வானிலையையும் மழைப் பற்றாக்குறையையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
இப்போது வெப்பமாக இருந்தாலும், அதிகளவில் மழை பெய்கிறது. எனவே, அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான கணிப்புகளை நாம் கவனித்து வருகிறோம்.
அந்த நேரம் கூடுதல் கண்காணிப்பும் ஆராய்ச்சியும் தேவைப்படும் காலமாகும். உண்மையில் இந்த சூப்பர் எல் நினோ கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரை தொடங்கியது, அதுதான் கோடையின் உச்சக்கட்டமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், இன்னும் மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது, மேலும் பருவமழை மாற்றமும் மழை பெய்ய உதவும். எனவே தான் சிலாங்கூர் மக்களின் தேவைக்கு நமது சுத்திகைக்கப்படாத நீர் கையிருப்பு போதுமானதாக உள்ளது என நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.
எல் நினோ நிகழ்வு அடுத்த ஆண்டு மத்தி வரை நீடிக்கக்கூடும் என்றும், இந்த மாதம் முதல் ஜனவரி 2027 வரை அது 'சூப்பர்' அல்லது மிக வலுவான நிலையை அடையக்கூடும் என்றும் நேற்று, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் கூறியிருந்தார்.
இந்நிலைமை கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட வானிலைக்கான அபாயத்தை அதிகரிப்பதுடன், புகைமூட்டத்தை ஏற்படுத்தக்கூடிய திறந்தவெளி எரிப்பு சம்பவங்களையும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வின்படி, எல் நினோ நிகழ்வுடன் ஒரே நேரத்தில் ஏற்படும் தென்மேற்குப் பருவமழை காரணமாக மழைப்பொழிவு குறைந்து, வானிலை அதிக வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறக்கூடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.




