கோலாலம்பூர், அக் 26: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேடிஎம்பி நிறுவனம் (KTMB) 11,888 கூடுதல் இரயில் இருக்கைகளை வழங்குகிறது.
கேடிஎம்பி, நவம்பர் 5 முதல் 9 வரை, பாடாங் பெசார் - கேஎல் சென்ட்ரல் - பாடாங் பெசார் (Padang Besar-KL Sentral-Padang Besar) வழித்தடத்தில் தினமும் இரு கூடுதல் இதிஎஸ்-மின்சார இரயில் சேவைகளை (ETS) வழங்கவுள்ளது.
மேலும், ஜேபி சென்ட்ரல் - கேஎல் சென்ட்ரல் - ஜேபி சென்ட்ரல் (JB Sentral-KL Sentral-JB Sentral) வழித்தடத்தில் நவம்பர் 6 முதல் 9 வரை தினமும் நான்கு கூடுதல் ETS சேவைகள் இயக்கப்படும்.
"பாடாங் பெசார் - கேஎல் சென்ட்ரல் - பாடாங் பெசார் வழித்தடத்திற்கு, இந்த ஐந்து நாள் இயக்கத்தின் போது வர்த்தகப் பிரிவுக்கான (Business Class Coach) வசதிகள் உட்பட 3,160 கூடுதல் இருக்கைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சேவைக்கான டிக்கெட் விற்பனை அக்டோபர் 27, மதியம் 12:00 மணி முதல் தொடங்கும்.
இதற்கிடையில், ஜேபி சென்ட்ரல் - கேஎல் சென்ட்ரல் - ஜேபி சென்ட்ரல் வழித்தடத்திற்கு, நவம்பர் 6 முதல் 9 வரை நான்கு தினசரி ETS சேவைகள் மூலம் 5,056 கூடுதல் இருக்கைகளை கேடிஎம்பி வழங்குகிறது.
இந்த வழித்தடத்திற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியே தொடங்கிவிட்டது," என்று அந்நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த சேவையுடன், நவம்பர் 5 முதல் 9 வரையிலான குறிப்பிட்ட தேதிகளில் பண்டார் தாசிக் செலாத்தான் - ஈப்போ - கிள்ளான் வழித்தடங்களுக்கான EMUPlus எனப்படும் கூடுதல் சிறப்பு இரயில் சேவை மூலம் 3,672 இருக்கைகளையும் கேடிஎம்பி வழங்குகிறது.
இந்த சேவைக்கான டிக்கெட் விற்பனையும் நாளை (அக்டோபர் 27) மதியம் 12:00 மணி முதல் திறக்கப்படும்.







