ஜோகூர் பாரு, ஜூலை 9 - அரசு சார்பற்ற அமைப்பான 'Stesen Pemantauan Rakyat', கோலாலம்பூரிலும் சிங்கப்பூரிலும் இருந்து ஜோகூருக்கு 240 வாக்காளர்களை ஏற்றிச் செல்ல 6 இலவச பேருந்து சேவையை ஏற்படுத்தியுள்ளது.
இரு பேருந்துகள் சிங்கப்பூர், CIQ சுல்தான் இஸ்கண்டார் சுங்க - குடிநுழைவு- தடுப்பு மைய வளாகத்தில் இருந்து வாக்காளர்களை ஏற்றிச் செல்லுமென அவ்வமைப்பின் பிரதிநிதி யொங் ஷுய் வெய் தெரிவித்தார்.
இந்த பேருந்துகள் தங்காக்,முவார்,பத்து பஹாட், பெக்கான் நெனாஸ்,செகாமாட், லாபிஸ், குளுவாங், ஆயேர் ஹித்தாம், கூலாய் ஆகிய பகுதிகளைக் கடந்துச் செல்லும் என்றாரவர்.
2018 -ஆம் ஆண்டில் இருந்து இத்தகைய இலவச பேருந்து சேவையை இவ்வமைப்பு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அப்பேருந்துகளுக்கான இருக்கைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என யொங் ஷுய் வெய் தெரிவித்தார்.
இவ்வேளையில், KTMB நிறுவனம் ஜூலை 10-இல் இருந்து 12-ஆம் தேதி வரையில் தென் மாநிலத்துக்கான அதன் ETS ரயில் சேவைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.
கேஎல் சென்ட்ரல்-ஜேபி சென்ட்ரல்-கேஎல் சென்ட்ரல் (KL Sentral-JB Sentral-KL Sentral) இடையிலான ரயில் சேவைக்கு, மொத்தம் 15,120 இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் விற்கப்படும் நிலையில், அவற்றில் இதுவரை 84 விழுக்காடு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டதாக KTMB குழும தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அஸ்லான் ஷா தெரிவித்தார்.







