கோலாலம்பூர்,செப் 25 : தெற்கு பகுதிக்கான, பயணிகளின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கோலாலம்பூர் சென்ட்ரல் (KL Sentral) - ஜேபி சென்ட்ரல் (JB Sentral) - கோலாலம்பூர் சென்ட்ரல் வழித்தடத்தில், டிசம்பர் 27 வரை ஒவ்வொரு வார இறுதியிலும் நான்கு கூடுதல் இதிஎஸ் (ETS) சேவைகளை, கேடிஎம்பி(KTMB) வழங்குகிறது.
இந்த கூடுதல் சேவைகள் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 50 நாட்களுக்கு இயக்கப்படும் என்றும், இதன் மூலம் 63,200 கூடுதல் இருக்கைகள் வழங்கப்படும் என்றும் KTMB அறிக்கையில் தெரிவித்தது.
இதற்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 7 முதல் தொடங்கப்பட்டது.
இந்த நான்கு கூடுதல் பயணங்களில், ஜேபி சென்ட்ரலில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் EX9572 சேவையும், மாலை 5.30 மணிக்கு புறப்படும் EX9578 சேவையும் கோலாலம்பூர் சென்ட்ரலை வந்தடையும்.
அதே போல், கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் EX9573 சேவையும், முற்பகல் 11.55 மணிக்கு புறப்படும் EX9575 சேவையும் ஜேபி சென்ட்ரலுக்குச் செல்லும்.
"இந்த நான்கு கூடுதல் இதிஎஸ் சேவைகளுக்கான டிக்கெட் விற்பனை இன்றுவரை வழங்கப்பட்ட இருக்கைகளில் 46 விழுக்காட்டை எட்டியுள்ளது.
பயணிகள் தங்களது வார இறுதிப் பயணங்களுக்கு முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய KTMB ஊக்குவிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் சேவைகளுடன் சேர்த்து, கோலாலம்பூர் சென்ட்ரல் - ஜேபி சென்ட்ரல் - கோலாலம்பூர் சென்ட்ரல் வழித்தடத்திற்கு மொத்தம் 12 இதிஎஸ் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன (தற்போதுள்ள 8 சேவைகளும் இதில் அடங்கும்).
இதன் மூலம் வார இறுதி நாட்களில் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 189,600 ஆக உயர்கிறது.
மேலும், KTMB நிறுவனம் செப்டம்பர் 25 முதல் 27 வரை எட்டு கூடுதல் இஎம்யுபிளஸ் (EMUPlus) சேவைகளையும் வழங்குகிறது.
பயணிகள் ஈப்போவிற்கான தங்களது பயணத்தைத் தொடங்க, கிள்ளான் நிலையத்தைத் தவிர பண்டார் தாசிக் செலத்தான் (Bandar Tasek Selatan) நிலையத்தையும் மற்றொரு விருப்பத் தேர்வாகப் பயன்படுத்தலாம்.
இந்தச் சேவை பண்டார் தாசிக் செலத்தான் - ஈப்போ - கிள்ளான் மற்றும் கிள்ளான் - ஈப்போ - பண்டார் தாசிக் செலத்தான் வழித்தடங்களில் 2,448 இருக்கைகளை வழங்குகிறது.
இதற்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 22 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கூடுதல் இதிஎஸ் மற்றும் இஎம்யுபிளஸ் சேவைகள், தங்களின் ' சாலையிலிருந்து ரயில்' (Road to Rail) என்ற நோக்கத்திற்கு ஏற்ப, வார இறுதி பயணத் தேவை அதிகரிக்கும் போது பொதுப் போக்குவரத்து விருப்பங்களை அதிகரிப்பதற்கும் இருக்கை வசதிகளைக் கூட்டுவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று KTMB தெரிவித்தது.
பொதுமக்கள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டு, KITS ஸ்டைல் செயலி (KITS Style app), KTMB அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் உள்ள டிக்கெட் முகப்புகளின் மூலம் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் சீரான முறையில் ரயிலில் ஏறுவதற்கு ஏதுவாக நிலையத்திற்கு முன்கூட்டியே வருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அது மேலும் கூறியது.








