கோலாலம்பூர், மார்ச் 26 - மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு கொமுட்டர் (KTM Komuter) சேவைகள் தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக KTMB அறிவித்துள்ளது.
பத்துமலை - புலாவ் செபாங் - பத்துமலை இடையிலான வழித்தடத்தில் இந்தச் சேவைகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும்.
மலாக்கா, பாத்தாங் பெனார் மற்றும் லாபு நிலையங்களுக்கு இடையே 434.423 கிலோமீட்டர் பகுதியில் மின்மயமாக்கல் அமைப்பில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யும் பணிகள் இன்று அதிகாலை 3.56 மணியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
"இந்தத் தடங்கல் காலத்தில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இடைநிலை பேருந்து வசதிகள் மற்றும் தரைவழிப் பணியாளர்களின் நேரடி உதவிகள் வழங்கப்பட்டன," என்று கே.டி.எம்.பி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் தங்களின் இலக்குகளைப் பாதுகாப்பாகச் சென்றடைந்ததையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் இத்தகைய சேவைத் தடங்கல்களை விரைவாகக் கையாள்வதற்கும், பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கே.டி.எம்.பி மீண்டும் உறுதி அளித்துள்ளது.
இது குறித்த மேல் தகவல்களைப் பெற பொதுமக்கள் கே.டி.எம்.பி-யின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களைப் பின்தொடரலாம் அல்லது 03-9779 1200 என்ற எண்களில் தொடர்பு மையத்திற்கு அழைக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







