கோலாலம்பூர், அக் 25 : நெடுங்காலமாகப் புகைமூட்டத்தின் பிடியில் சிக்கியிருந்த கோலாலம்பூர் மாநகரின் வானம் மீண்டும் தெளிவடைந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் தங்களின் மகிழ்ச்சியையும் பரவசத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா ‘Threads’ சமூக வலைதளப் பக்கத்தில் நடத்திய ஆய்வில் , கோலாலம்பூர் மற்றும் அதன் தூரத்தில் உள்ள மலைப் பகுதிகளின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைத் தற்போது தெளிவாகக் காண முடிகிறது என்பதை மக்கள் பரவலாக பதிவிட்டிருந்ததைக் கண்டறிந்தது.
அவ்வாறு இணையவாசிகள் பகிர்ந்த பரவசம் நிறைந்த பதிவுகளில், மகிழ்ச்சியில் உறைந்த தாய் ஒருவரின் பதிவும் அடங்கும்.
அம்மா வெளியே புகைமூட்டம் ஏதும் இல்லை என்று தனது சிறு பிள்ளைக் கூறியதை அடுத்து பால்கனிக்குச் சென்று பார்த்தபோது நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் கண்ட மிகத் தெளிவான கோலாலம்பூர் வானத்தைக் கண்டு வியப்படைந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பிறகு கோலாலம்பூரிலிருந்து கெந்திங் மலைப் பகுதி மிகத் தெளிவாகத் தெரிவதை விவரித்து மற்றொருவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
மேலும் ஒருவர், கோலாலம்பூரின் நேற்றைய காலை நேரத்தில், காற்றின் தரம் நியூசிலாந்தின் காற்றின் தரத்தை விடச் சிறப்பாக உள்ளது என வியப்புடன் பதிவிட்டிருந்தார்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகப் புகைமூட்டத்தால் முடங்கியிருந்த தங்களுக்கு இந்தத் தெளிவான வானிலை மீண்டும் வெளிப்புறப் பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.
சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் மலேசிய காற்றுத் தூய்மைக்கேட்டு மேலாண்மை முறையின் இணையதளத் தரவுகளின்படி, கோலாலம்பூரின் முக்கிய இரு கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மிதமான நிலைக்குத் திரும்பியுள்ளது.







