ஷா ஆலாம், அக் 15 - பள்ளிகளைத் தற்காலிகமாக மூடும் அதிகாரத்தைப் பள்ளி நிர்வாகங்களுக்கே வழங்க வேண்டும் என்று தேசிய பெற்றோர்-ஆசிரியர் சங்க ஆலோசனைக் குழுவின் தலைவர் இணைப் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அலி ஹசான் தெரிவித்தார்.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு கல்வி அமைச்சு நிர்ணயித்துள்ள வரம்பைத் தாண்டும்போது அத்தகைய முடிவை எடுப்பது, பள்ளிகள் முன்கூட்டியே வீட்டிலிருந்தபடியே கற்றல் கற்பித்தல் முறைக்குத் தயாராவதற்கும், பெற்றோர்கள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கும் எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கல்வி அமைச்சு அல்லது மாநிலக் கல்வித் துறைகளின் அறிவிப்புகளுக்காகக் காத்திருக்காமல் பள்ளி நிர்வாகங்களே விரைவாக முடிவெடுக்க இந்த அணுகுமுறை உதவும் என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நடைமுறைப்படி மதிய வேளையில் பள்ளிக் கூடம் மூடப்படுவது குறித்து அறிவிப்பது செயல்திறன் மிக்கதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது பல பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து வருவதால் இந்த நடைமுறையை அனைத்துத் தரப்பினரும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலகங்களுடன் இணைந்து வழிகாட்டுதல்களின்படி விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







