ஜொகூர் பாரு, அக்.7 : ஜோகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளையும் (அக்டோபர் 8) வெள்ளிக்கிழமையும் (அக்டோபர் 9) இரு நாட்களுக்கு மூடப்படும்.
அம்மாநிலத்தில் மோசமடைந்திருக்கும் புகைமூட்டம் மற்றும் காற்றின் தரம் காரணமாக, பள்ளிக்கூடங்களை மூட ஜொகூர் இடைக்கால ஆட்சியாளர் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் (Tunku Mahkota Ismail) உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக, ஜொகூர் கல்வி, தகவல் குழுவின் தலைவர் டாக்டர் முஹம்மத் நகிப் முகமட் கசாலி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்காலிக மூடல் காரணமாக, நான்காம் ஆண்டு கற்றல் மேட்ரிக்ஸ் (MPT4) அல்லது பிற பள்ளி மதிப்பீடுகளை நடத்தவிருந்த பள்ளிகள் அவற்றை ஒத்திவைக்கும் என்றும், அதற்கான புதிய தேதிகள் ஜொகூர் கல்வித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் இந்த இரு நாட்களிலும், மாணவர்கள் கல்வியில் பின் தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக வீட்டிலிருந்தே கற்கும் இணையவழி கல்வி முறை (PdPR) தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களின் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் டாக்டர் நகிப் வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்கு இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
புகைமூட்ட நிலவரத்தின் மாற்றங்களைப் பொறுத்தே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்த அடுத்தகட்ட முடிவுகள் அமையும் என்றும் அவர் கூறினார்.
இந்த முடிவு வேலைக்குச் செல்லும் பெற்றோர்களைப் பாதிக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முதலாளிகள் தங்களால் இயன்ற நியாயமான பணி நெகிழ்வுத்தன்மையை (flexibility) வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.







