ஷா ஆலாம், அக் 7 : நாட்டின் புகைமூட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாநிலக் கல்வித் துறைகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தங்களின் பகுதிகளில் உள்ள காற்று மாசடைவுக் குறியீட்டை (IPU) தீவிரமாகக் கண்காணிக்குமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசடைவுக் குறியீடு (IPU) 100-க்கும் அதிகமாகப் பதிவாகும் பகுதிகளில், விளையாட்டு மற்றும் காலைப் பேரணி உள்ளிட்ட வகுப்பறைக்கு வெளியிலான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
"IPU அளவு 100-ஐத் தாண்டும் போது, மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும். அதுவே IPU அளவு 200-ஐத் தாண்டும் பட்சத்தில், அந்தப் பகுதி அல்லது மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் உடனடியாக மூடப்பட வேண்டும்," என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து, ஜொகூர் மாநிலக் கல்வித் துறையின் கீழ் உள்ள பத்து பஹாட் (Batu Pahat) மாவட்டப் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சூழ்நிலை மீண்டும் பாதுகாப்பான நிலைக்குத் திரும்பி, அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை இந்த மூடல் தொடரும்.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போதைய விதிமுறைகளுக்கு ஏற்ப 'வீட்டிலிருந்தபடியே கற்றல் மற்றும் கற்பித்தல்' (PdPR) முறை பொருத்தமான முறையில் செயல்படுத்தப்படும்.
வானிலை மிகவும் வெப்பமாகவும், புகைமூட்டமாகவும் இருந்தால் வெளிப்புற நடவடிக்கைகளைப் பள்ளிகள் ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்களை அத்தகைய சூழ்நிலைக்கு ஆளாக்கும் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் போதுமான சுத்தமான குடிநீர் விநியோகம் இருப்பதை உறுதி செய்வதோடு, மாணவர்கள் சொந்தமாகக் குடிநீர் கொண்டு வருவதையும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை ஊக்குவிப்பதையும் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
விடுதி மாணவர்களைப் பொறுத்தவரை, நிலைமை மோசமடைந்து வேறு நீர் ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில், அவர்களுக்குக் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கப்பட வேண்டும்.
"கல்வி அமைச்சு தனது அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எப்போதுமே முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







