கூச்சிங், அக் 25: மலேசியப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் முன்பு 27 பேரில் ஒருவருக்கு என்றிருந்த நிலையில், தற்போது 23 பேரில் ஒருவருக்கு என்ற அளவில் அதிகரித்துள்ளது என மகளிர், குடும்ப , சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.
மலேசிய தேசிய புற்றுநோய் பதிவின்படி , இந்நாட்டுப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோயே இன்னும் மிக முக்கியமான மற்றும் பொதுவான புற்றுநோயாக நீடிக்கிறது என்று சரவாக்கில் இன்று நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாத விழாவில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.
2023-இன் தேசிய சுகாதாரம் மற்றும் நோய் பாதிப்பு விகித கணக்கெடுப்பின் படி , 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 71 விழுக்காட்டினர் இதுவரை மேமோகிராம் (Mammogram) பரிசோதனை செய்து கொண்டதே இல்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது என்று அவர் கூறினார்.
அதேபோல, 46 விழுக்காட்டுப் பெண்கள் தங்களின் மார்பகங்களைச் சுயப் பரிசோதனை செய்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பக்காலப் பரிசோதனைகள் மிகவும் குறைவாக இருப்பதால் இந்நோயை தொடக்கத்திலேயே கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது என்றும், ஆனால் தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்தால் அதிலிருந்து பூரண குணமடைந்து உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 95 விழுக்காடு வரை உள்ளது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஆரம்பக்கால மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை அனைத்துப் பெண்களும் எளிதாகப் பெறும் நோக்கில், அரசாங்கம், தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) மூலமாக கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் மேமோகிராம் பரிசோதனை உதவித் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்துடன் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'வி கேர்' (WeCaRe) பிரச்சாரமும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் 30 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவில் மொத்தம் 5,98,919 பெண்கள் இந்த உதவித் தொகை திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இதில் சரவாக்கில் மட்டும் 90,075 பெண்கள் பயனடைந்துள்ள வேளையில், அவர்களில் 88 பேருக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைக்கு வழிகாட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் நான்சி சுக்ரி மேலும் தெரிவித்தார்.







