அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்: குடும்ப ஆலோசனை சேவையை வலுப்படுத்தும் KPWKM

6 அக்டோபர் 2026, 2:14 AM
அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்: குடும்ப ஆலோசனை சேவையை வலுப்படுத்தும் KPWKM

கோலாலம்பூர், அக். 6 — கடந்த ஆண்டு மட்டும் நாட்டில் 60,457 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.1 விழுக்காடு அதிகமாகும்.

குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், தம்பதியரிடையே மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் குடும்ப ஆலோசனை சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன.

இந்த முயற்சிகள் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம், LPPKN வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, தேசியப் பதிவு துறையின் ஒத்துழைப்புடன் LPPKN-இன் கீழ் குடும்ப சமரச அமைப்பு, அதாவது ‘Badan Pendamai Keluarga’, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

குடும்பப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு இந்த அமைப்பின் மூலம் குடும்ப ஆலோசனை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபரில் செயல்படத் தொடங்கியதிலிருந்து, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் மொத்தம் 236 தம்பதியரின் வழக்குகளை குடும்ப சமரச அமைப்பு கையாண்டுள்ளது.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கணவன், மனைவி ஆகிய இருவரை மட்டுமல்லாது, அவர்களின் பிள்ளைகளின் உணர்வு மற்றும் மனநலத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனிடையே, குடும்ப வன்முறை சம்பவங்களும் நாட்டில் அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக நான்சி கூறினார்.

அரச மலேசியக் காவல்துறை தரவுகளின்படி, கடந்த ஆண்டு 7,391 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2023ஆம் ஆண்டு பதிவான 5,507 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான அதிகரிப்பாகும்.

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் பெண்கள் மேம்பாட்டுத் துறை, ‘Hentikan Keganasan Rumah Tangga’ எனப்படும் ‘குடும்ப வன்முறையை நிறுத்துவோம்’ என்ற பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக நான்சி தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.