கோலாலம்பூர், ஜூலை 9 - மலேசியாவில் பொருளாதார நெருக்கடி, தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பின்மை மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை அமைப்பதில் நீடிக்கும் சவால்கள் போன்ற காரணங்களால், நாட்டின் இளம் தலைமுறையினர் தங்களது திருமண வாழ்க்கையைத் தள்ளிப்போடுவதாக தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியமான எல்.பி.பி.கே.என் (LPPKN) தெரிவித்துள்ளது.
மலேசிய புள்ளியியல் துறையின் தரவுகளின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டில் ஆண்களின் சராசரி திருமண வயது 31ஆகவும், பெண்களின் சராசரி திருமண வயது 29ஆகவும் அதிகரித்துள்ளது.
முந்தைய தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வயது வரம்பு கணிசமாக உயர்ந்துள்ளதால், தம்பதியரின் மகப்பேறு காலம் சுருங்கி, நாட்டின் எதிர்கால பிறப்பு விகிதம் பெருமளவில் பாதிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்கால இளைஞர்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் விருப்பம் இருந்தாலும், நிதி நெருக்கடி மற்றும் நிலையான வருமானத்திற்கான தேடலே இந்த தாமதத்திற்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.
தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைகள் கிடைக்காத சூழலில், வாழ்வாதாரத்திற்காக இளைஞர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் கடுமையாகப் பாதிக்கிறது.
மலேசியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சுமார் தொண்ணூறு இலட்சம் பேர் உள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 26 விழுக்காடாகும். இளைஞர்களுக்குத் தரமான கல்வி, முறையான வேலைவாய்ப்பு மற்றும் நல்வாழ்வுக்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பது அவசியமாகும்.
இளைஞர்கள் தங்களின் குடும்ப வாழ்க்கையைச் சீராகத் தொடங்குவதற்கு உதவும் வகையில், திருமணத்திற்கு முந்தைய வழிகாட்டல் திட்டங்கள், மகப்பேறு சிகிச்சை உதவித் திட்டங்கள் மற்றும் குடும்ப ஆலோசனைகள் போன்ற பல்வேறு சேவைகளை எல்.பி.பி.கே.என் வழங்கி வருகிறது.
தகுந்த வேலைவாய்ப்புகள், நெகிழ்வான பணிச்சூழல் மற்றும் பணிபுரியும் பெற்றோருக்கான ஆதரவு வசதிகளை உருவாக்குவதன் மூலமே இந்தச் சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அட்ஸ்மெல் மஹ்மூத் வலியுறுத்தினார்.







