இவ்வாண்டு சிலாங்கூர் 90 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை இலக்காகக் கொண்டுள்ளது

24 அக்டோபர் 2026, 10:34 AM
இவ்வாண்டு சிலாங்கூர் 90 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை இலக்காகக் கொண்டுள்ளது

பாங்கி, அக் 24 -இவ்வாண்டில் சிலாங்கூர் மாநிலம் 90 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை இலக்காகக் கொண்டுள்ளது என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இது கடந்த ஆண்டு பதிவான 80 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை விட அதிகமாகும்.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று, பண்டார் பாரு பாங்கியில் நடைபெற்ற 'மடானி கித்தா @ சுங்கை ராமால்' நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசும் போது அவ்வாறு கூறினார்.

மாநிலத்தின் வலுவான முதலீட்டு உத்வேகத்தின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலம் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே 70 பில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டைப் பெற்று நாட்டின் முதன்மை முதலீட்டு இடமாகத் திகழ்கிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் 26.5 சதவீதப் பங்களிப்பை வழங்கி நாட்டின் முக்கிய பொருளாதார உந்துசக்தியாக விளங்குகிறது.

தற்போது கிட்டத்தட்ட 460 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் சிலாங்கூரின் பொருளாதார மதிப்பு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500 பில்லியன் ரிங்கிட்டை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய பொருளாதார வளர்ச்சியும் முதலீடுகளும் அதிகரிக்கும் அதே வேளையில், அதன் பலன்கள் அனைத்து இன மக்களையும் சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அமிருடின் வலியுறுத்தினார்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, மக்களின் வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க உதவும் திட்டங்களும் சமமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்றாரவர்.

இதற்காக, சிலாங்கூர் மாநிலத்தின் போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்க உயர் தொழில்நுட்பத் துறைகள், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் அதிக மதிப்புமிக்க தொழில்துறைகளில் மாநில அரசு தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.