ஷா ஆலாம், அக். 21 – வீட்டுக் கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து, மறுசுழற்சி செய்வதற்கான பழக்கம் சிலாங்கூர் மக்களிடையே அதிகரித்து வருவதாக மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் செல்கித்தார் (SELKitar) திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டுக் கழிவுகளை நிர்வகிக்கும் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மறுசுழற்சிப் பழக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கும் சிலாங்கூர் மக்கள் தயாராக இருப்பதை இந்த முன்னேற்றம் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

சுபாங் ஜெயா மற்றும் செப்பாங் பகுதிகளில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்ட செல்கித்தார் திட்டத்தின் கீழ், இதுவரை 6,300 டன்னுக்கும் அதிகமான மறுசுழற்சிப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் பிளாஸ்டிக் போத்தல்கள், பால் பொதிகள் மற்றும் குளிர்பானக் கேன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கும்.
இது தொடர்பாக இன்று தமது முகநூல் பதிவில் கருத்துத் தெரிவித்த அமிருடின், சிலாங்கூர் மக்கள் தங்களது வீடுகளிலிருந்தே மறுசுழற்சிப் பழக்கத்தைப் பின்பற்றுவதில் ஆர்வத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
வீடுகளில் கழிவுகளைப் பிரித்துச் சேகரிப்பதை அன்றாட நடைமுறையாக மாற்றுவதன் மூலம், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவைக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் நிலவளத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் பங்களிக்க முடியும்.
மேலும், கழிவு மேலாண்மையை வலுப்படுத்துவதும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதும் சிலாங்கூர் மாநிலத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது திட்டங்களான RS-1 மற்றும் RS-2 ஆகியவற்றின் முக்கிய நோக்கங்களில் அடங்கும்.
எனவே, செல்கித்தார் திட்டத்தில் மேலும் அதிகமான சிலாங்கூர் மக்கள் இணைந்துகொள்ள வேண்டும் என அமிருடின் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் காண்டோமினியங்களில் வசிப்பவர்களையும் உள்ளடக்கும் வகையில், திட்டத்தின் அடுத்த கட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.







