பள்ளி மாணவர் இலவச உணவுத் திட்டம்: அடுத்தாண்டு முழுவதும் தொடர உத்தேசம்

24 அக்டோபர் 2026, 8:34 AM
பள்ளி மாணவர் இலவச  உணவுத் திட்டம்: அடுத்தாண்டு முழுவதும் தொடர உத்தேசம்
பள்ளி மாணவர் இலவச  உணவுத் திட்டம்: அடுத்தாண்டு முழுவதும் தொடர உத்தேசம்

பாங்கி,அக் 24: சிலாங்கூர் மாநில அரசின் இலவச காலை உணவுத் திட்டமான 'NutriSel' (சிலாங்கூர் ஊட்டச்சத்து திட்டம்) அடுத்த ஆண்டு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள மேலும் பல பள்ளி மாணவர்கள் சத்தான உணவைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்களென மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இதுவரை 1 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 106,000 பள்ளி மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்று அவர் விளக்கினார்.

"இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு முழுவதும் சிலாங்கூர் பிள்ளைகளுக்காக இந்த 'NutriSel' திட்டத்தை நீட்டிப்பது குறித்து நான் ஆலோசித்து வருகிறேன்," என்று இன்று இங்கு நடைபெற்ற 'Madani Kita@Sungai Ramal' திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசியபோது அவர் கூறினார்.

படம் - மீடியா சிலாங்கூர்

பாங்கி, பண்டார் பாரு பங்கியிலுள்ள 'ஜாலான் தீகா' தேசியப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகச்சியில் 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், நலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க 34 அரசு அமைப்புகளும் இதில் பங்கேற்றன.

'NutriSel' திட்டம், கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாநிலம் முழுவதும் உள்ள 932 பள்ளிகளில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டது.

மாத வருமானம் 2,000 ரிங்கிட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த இலவச உணவு வழங்கப்படுகிறது.

இதனிடையே, கல்வித் துறைக்கான நிதியுதவி மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கான உதவிகள் உட்பட, தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் தொடர்ந்து வளங்களை ஒதுக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"சிலாங்கூர் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் (UIS), சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (STDC) மற்றும் சிலாங்கூர் பல்கலைக்கழகம் (Unisel) போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் படிக்கும் 4,000 சிலாங்கூர் மாணவர்களின் கல்வி மற்றும் தங்குமிடச் செலவுகளின் ஒரு பகுதியை அவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது," என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.