கோம்பாக், செப் 9 - சிலாங்கூர் ஊட்டச்சத்து (NutriSel) இலவச உணவுத் திட்டத்தை சில மேம்பாடுகளுடன் அடுத்த ஆண்டும் தொடர மாநில அரசு உத்தேசித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பள்ளிகளிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அரசு தொகுத்த பிறகு, இது குறித்து 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்று இங்குள்ள கோம்பாக் செத்தியா இடைநிலைப்பள்ளியில் (SMK Gombak Setia) நியூட்ரிசெல் திட்ட செயல்பாட்டினைப் பார்வையிட்ட பிறகு அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் (வளர்ச்சி) டத்தோ ஜொஹாரி அனுவார் மற்றும் கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளர் ரோசானா ஜைனல் ஆபிதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அமிருடின் ஷாரி பள்ளி உணவகத்தில் மாணவர்களுடன் காலை உணவு அருந்தினார்.
நியூட்ரிசெல் திட்டம், கடந்த ஆகஸ்ட் 3 -ஆம் தேதி சிலாங்கூர் முழுவதும் உள்ள 932 பள்ளிகளில் தொடங்கப்பட்டது.

மாதாந்திர வருமானம் RM2,000-க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 104,640 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள்.
இத்திட்டம் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இலவச உணவை வழங்குகிறது. அக்டோபர் மாதம் வரை செயல்படவுள்ள இந்தத் திட்டம், உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மொத்தம் RM12.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.






