தெலோக் பங்லிமா காராங், அக். 5 — சிலாங்கூர் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், மெகா நியூட்ரிசெல் (Mega NutriSel) திட்டம் அக்டோபர் மாத மத்தியில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை வலுப்படுத்தும் மாநில அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, நியூட்ரிசெல் திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

நியூட்ரிசெல் திட்டத்தைத் தொடர்வதற்கான ஒதுக்கீடு மற்றும் செலவினத் தேவைகள் குறித்து மாநில அரசாங்கம் தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது சிலாங்கூர் முழுவதும் 932 பள்ளிகளில், மாத வருமானம் RM2,000க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 104,640 மாணவர்கள் நியூட்ரிசெல் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
கோலா லங்காட் மாவட்டத்தில் மட்டும் 78 பள்ளிகளைச் சேர்ந்த 8,616 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவச உணவைப் பெற்று வருகின்றனர்.

நியூட்ரிசெல் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக மாநில அரசாங்கத்திற்கு கூடுதலாக RM2 மில்லியன் ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகவும் அமிருடின் தெரிவித்தார்.
இந்த கூடுதல் நிதி மூலம் நீண்ட காலம் கெடாமல் வைத்திருக்கக்கூடிய பால், ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
சிலாங்கூர் முழுவதும் உள்ள 932 பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் நியூட்ரிசெல் திட்டம் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இதற்காக மாநில அரசாங்கம் RM12.5 மில்லியன் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.







