சுபாங் ஜெயா, செப். 28 – சுபாங் ஜெயா மாநகராட்சியின் (MBSJ) கீழ் இயங்கும் 78 பள்ளிகளைச் சேர்ந்த 7,213 மாணவர்கள் இவ்வாண்டு சிலாங்கூர் ஊட்டச்சத்து உதவித் திட்டமான NutriSel மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டம் குடும்பங்களின் அன்றாடச் செலவுச் சுமையைக் குறைப்பதுடன், மாணவர்கள் தங்களது கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்கும் உதவும் என சிலாங்கூர் துணை மாநிலச் செயலாளர் டத்தோ அமிருல் அஸிஸான் அப்துல் ரஹிம் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம், மாத வருமானம் 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக உள்ள B40 குடும்பங்களைச் சேர்ந்த ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு உதவி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே Supplementary Food Programme எனப்படும் துணை உணவுத் திட்டத்தின் கீழ் பயனடையாத மாணவர்களுக்கு NutriSel திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு NutriSel திட்டத்தைச் செயல்படுத்த சிலாங்கூர் மாநில அரசு 14.4 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 962 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், சுமார் 1,06,000 மாணவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







