கிள்ளான் துறைமுக ECRL திட்டம் குறித்து உள்ளூர் மக்கள் கருத்துகள் வழங்க அழைப்பு

24 அக்டோபர் 2026, 8:02 AM
கிள்ளான் துறைமுக ECRL திட்டம் குறித்து உள்ளூர் மக்கள் கருத்துகள் வழங்க அழைப்பு

ஷா ஆலாம், அக் 24: கிள்ளான் துறைமுகத்தில், ECRL கிழக்குக் கரை இரயில் திட்டத்தின் செக் ஷன் D மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அறிக்கை ஜாலான் காஸ்தம் (Jalan Kastam) முதல் வடக்கு துறைமுகம் மற்றும் மேற்கு துறைமுகம் வரையிலான பாதையை உள்ளடக்கியுள்ளது.

அந்த அறிக்கையை கிள்ளான் மாநகர் மன்ற தலைமையகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அம்மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அப்துல் ஹமித் ஹுசைன் தெரிவித்தார்.

பொதுமக்கள் இந்த மேம்பாட்டுத் திட்டத்தையும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மதிப்பீடு செய்வதற்காக அந்த அறிக்கை நவம்பர் 17-ஆம் தேதி வரை பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.

"பொதுமக்கள் இந்த கண்காட்சி காலத்தின் போது தங்களின் பயனுள்ள கருத்துக்கள், ஆலோசனைகள் அல்லது பின்னூட்டங்களைச் சமர்ப்பிக்கலாம். நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பொதுமக்களின் கருத்துக்கள் மிகவும் முக்கியம் என்பதால், அனைவரும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த சுற்றுச் சூழல் பாதிப்பு அறிக்கை 2026 அக்டோபர் 19 முதல் நவம்பர் 17 வரை பார்வைக்கு வைக்கப்படும். அதே வேளையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை டிசம்பர் 2 வரை சமர்ப்பிக்கலாம்.

ECRL திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மற்றும் மேற்குக் கரைக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பு மேம்படும்.

நீண்ட தூர பயணங்களுக்கு இது சிறந்த மாற்றாக அமையும் என்றும் அப்துல் ஹமித் குறிப்பிட்டார்.

மேலும், இந்த இரயில் கட்டமைப்பு உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும், சரக்கு போக்குவரத்தின் திறனை அதிகரிக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.

"ECRL மூலமான சரக்கு போக்குவரத்து இணைப்பு, பொருட்களின் நடமாட்டத்தை எளிதாக்கும், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் மற்றும் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய உற்பத்தித் துறையினருக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும்," என்றார்.

கடந்த பிப்ரவரி 2025- இல், போக்குவரத்து அமைச்சு செக் ஷன் D கட்டுமானத்தின் கீழ் 25 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை இரயில் பாதையாக மாற்றுவதற்கான ஒப்புதலை அறிவித்தது.

இந்த இருவழிப் பாதையானது சரக்கு போக்குவரத்து திறனை அதிகரிப்பதோடு, ECRL மற்றும் கெடிஎம்பி (KTMB) இரயில் சேவைகள் தனித்தனியாக இயங்குவதையும் சாத்தியமாக்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.