ஷா ஆலாம், அக். 20 – கிள்ளான் மாநகரில் கட்டுமானக் கழிவுகளைச் சட்டவிரோதமாகக் கொட்டும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, பல்வேறு அரசாங்க அமைப்புகளை உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழுவை கிள்ளான் அரச மாநகராட்சி மன்றம் (MBDK) அமைத்துள்ளது.
கிள்ளான் மாநகரில் தற்போது 21 சட்டவிரோதக் குப்பை தளங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொறுப்பற்ற ஒப்பந்ததாரர்கள் அதிகரித்து வருவதுடன், குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள காலி நிலங்களைச் சட்டவிரோதமாகக் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டும் தளங்களாகப் பயன்படுத்தி வருவதாகக் கிள்ளான் மாநகர் மேயர் டத்தோ அப்துல் ஹமிட் ஹுசேன் தெரிவித்தார்.
இதனைக் கட்டுப்படுத்த சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதில் MBDK அமலாக்கப் பிரிவினருடன், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்படவுள்ளன.
இந்தப் பணிக்குழுவில் சுற்றுச்சூழல் துறை (JAS), பொதுப்பணித் துறை (JKR), நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS), மாவட்ட மற்றும் நில அலுவலகம், நிலம் மற்றும் சுரங்கத் துறை, காவல் துறை, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) ஆகிய அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைகள் மாநகரின் அழகைச் சீர்குலைப்பதுடன், சுற்றுச்சூழல், பொதுச் சுகாதாரம் மற்றும் வடிகால் அமைப்புகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகளால் நீரோட்டப் பாதைகள் அடைபட்டு, மாவட்டம் முழுவதும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகவும் அவர் எச்சரித்தார். இந்தத் தகவல்களை தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது கிள்ளான் மாநகரில் செயல்பாட்டில் உள்ள 21 சட்டவிரோதக் குப்பை கொட்டும் தளங்கள் மேரு, ஜோஹான் செத்தியா மற்றும் கிள்ளான் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன.
இதற்கிடையில், சட்டவிரோதமாகக் குப்பைகளை கொட்டுவோர் மீது எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என MBDK எச்சரித்துள்ளது.

குற்றவாளிகளுக்கு அதிக அபராதம் விதிப்பது, கழிவுகளை அகற்றுவதற்கான முழுச் செலவையும் அவர்களே ஏற்கச் செய்வது, சம்பந்தப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேயர் தெரிவித்தார்.
வீடுகளைப் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபடும் வீட்டு உரிமையாளர்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கட்டுமானக் கழிவுகளை அகற்றுவதில் தங்களுக்குச் சட்டப்பூர்வமான பொறுப்பு இருப்பதை உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கட்டுமானக் கழிவுகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கழிவு அகற்றல் நிலையங்களில் மட்டுமே முறையாகக் கொட்டப்பட வேண்டும். சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் MBDK அறிவுறுத்தியுள்ளது.







