ஷா ஆலாம், செப்.22: கிள்ளான் பண்டமாரான் ஜெயா தேசியப் பள்ளி (SK Pandamaran Jaya) முன்பாக வியாபாரிகள் உணவு விற்பனை செய்வதாகப் பெற்றோரிடமிருந்து புகார்கள் கிடைத்துள்ளன.
இதன் தொடர்பாகக் கிள்ளான் மாநகர மன்றம் (MBDK) உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளி வளாகத்திற்கு வெளியே சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் உணவு விற்பனை செய்வதால் மாணவர்களுக்கு உணவு நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
மேலும், பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக MBDK தெரிவித்துள்ளது.
அதேவேளை, மாணவர்களின் ஊட்டச்சத்து தொடர்பான கவலைகளும் இந்த விவகாரத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக மன்றம் கூறியுள்ளது.
பள்ளிக்கு வெளியே திறந்த நிலையில் உணவுப் பொருட்கள் வைக்கப்படுவதால், தூசி, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மற்றும் அதிக வெப்பம் போன்ற காரணிகளால் உணவு மாசுபடும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக உணவு நச்சுத்தன்மை சம்பவம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுடன் வழக்குகளும் தொடரப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக MBDK எச்சரித்துள்ளது.
பெற்றோரிடமிருந்து புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, பண்டமாரான் ஜெயா கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுவின் (JPKK) தலைவர் ஹுசைன் சாலேவுடன் MBDK ஒருங்கிணைப்புக் கூட்டத்தையும் நடத்தியது.
சம்பந்தப்பட்ட உணவு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தலும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டதுடன், உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
விற்பனையாளர்கள் மீண்டும் அங்கு வந்து உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உறுதியான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் MBDK எச்சரித்துள்ளது.







