ஷா ஆலாம், அக் 24: கிள்ளானில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீடுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால், 2027- ஆம் ஆண்டிற்கான சொத்து வரியில் 900 ரிங்கிட் வரை தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது.
சூரிய ஆற்றல் தகடுகள் (Solar panels) பொருத்துதல், மறுசுழற்சி நடவடிக்கைகள் மற்றும் மின்சார வாகனங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த சலுகை வழங்கப்படுமென கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அப்துல் ஹமித் ஹுசைன் தெரிவித்தார்.
2026 ஜனவரி முதல் டிசம்பர் வரை மேற்கொள்ளப்படும் இந்த பசுமை நடைமுறைகள் முறையாக மதிப்பிடப்பட்ட பின்னரே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 2027-ஆம் ஆண்டுக்கான வரியில் இந்தத் தள்ளுபடி வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

" கிள்ளான் மாநகர் மன்றம் இம்மாதிரியான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தங்களின் வீடு கிள்ளான் மாநகர் மன்ற நிர்வாக எல்லைக்குள் அமைந்திருப்பதையும், சொத்து வரி நிலுவைத் தொகைகள் ஏதும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அத்துடன் இதற்கான ஆதார ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
கிள்ளான் மாநகரத்தை குறைந்த கார்பன் கொண்ட ஒரு விவேக நகராக மாற்றுவதற்கும், மக்கள் மத்தியில் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் இந்த ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் வரி தள்ளுபடி உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
இம்முயற்சி, குடியிருப்புப் பகுதிகளில் பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, 2026 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மாநில அரசால் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வீட்டு உரிமையாளர்களுக்கு 100 % வரை சொத்து வரி தள்ளுபடி வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்திருந்தார்.
இதனிடையே , சொத்து வரியை முன்கூட்டியே செலுத்துவதையும் நிலுவைத் தொகைகளை முழுமையாகச் செலுத்துவதையும் ஊக்குவிக்க, வரும் நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை அதிர்ஷ்டக் குலுக்கல் பிரச்சாரத்தை கிள்ளான் மாநகர் மன்றம் நடத்தவுள்ளது.
கிள்ளான் மாநகர் மன்றத்தின் 'iPay' இணையத்தளம் வழியாக வரியைச் செலுத்தும் தகுதியுடையவர்களுக்கு ஹோண்டா வாரியோ மோட்டார் சைக்கிள், மின்சார ஸ்கூட்டர்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் தங்கக் கட்டிகள் உட்பட 65 முக்கியப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.







