புகைமூட்டம்: இந்தோனேசியாவிற்கு உதவ மலேசியா தயார்; அந்நாட்டின் பதிலுக்காகக் காத்திருப்பு

23 அக்டோபர் 2026, 10:45 AM
புகைமூட்டம்: இந்தோனேசியாவிற்கு உதவ மலேசியா தயார்; அந்நாட்டின் பதிலுக்காகக் காத்திருப்பு

புத்ராஜெயா, அக்டோபர் 23 — இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தேவையான உதவிகள் குறித்து, மலேசியாவின் வெளியுறவு அமைச்சும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சும் அந்நாட்டிடமிருந்து இதுவரை எந்த பதிலையும் பெறவில்லை.

இதனை தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

இருப்பினும், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ தேவையான உபகரணங்கள் மற்றும் வளங்களை அனுப்ப மலேசியா தயாராக இருப்பதாக அவர் உறுதிபடக் கூறினார்.

மடாணி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி ஃபாட்சில், இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான நல்லுறவைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான அரசதந்திர உறவுகளைப் பிரதமர் பாராட்டியதாகக் குறிப்பிட்ட ஃபஹ்மி, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தோனேசியாவுடன் ஒத்துழைக்க மலேசியா தயாராக இருப்பதையும் அன்வார் மீண்டும் உறுதிப்படுத்தியதாகக் கூறினார்.

இதற்கிடையில், நாட்டில் நிலவி வரும் புகைமூட்டச் சூழல் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப், புகைமூட்டம் தொடர்பான தற்போதைய நிலவரத்தை அமைச்சரவைக்கு எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மற்றொரு விவகாரமாக, கலிமந்தானில் ஏற்பட்ட காட்டுத்தீயுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 11 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக இந்தோனேசியா இன்று அறிவித்துள்ளதையும் மலேசிய அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.

எனினும், அந்த 11 நிறுவனங்களில் மலேசிய நிறுவனங்கள் எதுவும் சம்பந்தப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.