காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மலேசியாவின் உதவிக்கு இந்தோனேசியா ஒப்புதல்

16 அக்டோபர் 2026, 7:15 AM
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மலேசியாவின் உதவிக்கு இந்தோனேசியா ஒப்புதல்

ஜகார்த்தா, அக். 16 – இந்தோனேசியாவில் காடுகள் மற்றும் கரி மண் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்த மலேசியா உட்பட அண்டை நாடுகள் வழங்க முன்வந்துள்ள உதவிகளை ஏற்றுக்கொள்ள அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தத் தீ சம்பவங்களால் புகைமூட்டம் ஏற்பட்டு இந்தோனேசியாவின் பல பகுதிகளிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தோனேசியாவின் தேசிய செய்தி நிறுவனமான அந்தாரா (ANTARA) வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அர்மனாதா நசீர் இதனைத் தெரிவித்தார்.

அண்டை நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளைத் தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பான BNPB இறுதிப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

அண்டை நாடுகளின் உதவியைப் பெறுவதற்கு முன்னதாகவே, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இந்தோனேசியா தனது உள்நாட்டு வளங்களைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன.

அக்டோபர் 13ஆம் தேதி நிலவரப்படி, தீயணைப்புப் படையினர், ராணுவத்தினர், காவல்துறையினர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் உள்ளிட்ட மொத்தம் 60,177 பேர் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் வான்வழியாக நீரைப் பீய்ச்சியடிக்கும் நடவடிக்கைகளும், தீ அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் செயற்கை மழையை ஏற்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மேற்கு ஜாவாவின் ஹம்பாலாங் பகுதியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோவைச் சந்தித்த மலேசியத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஒரு விமானம், மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 52 தீயணைப்புப் பணியாளர்களை வழங்க மலேசியா தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், எல்லை தாண்டிப் பரவும் புகைமூட்டம் தென்கிழக்கு ஆசியாவைத் தொடர்ந்து பாதித்து வரும் நிலையில், தீயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இந்தோனேசியா ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளதாக நசீர் உறுதிப்படுத்தினார்.

மேலும், பரவலான அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீயணைப்பு நடவடிக்கைகளின் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினசரி பதிவாகும் வெப்பப் புள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நிலவும் வானிலைச் சூழல் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குச் சவாலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, புகைமூட்டத்தால் எல்லைப் பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து, பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தரையில் மேற்கொள்ளப்படும் தீயணைப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு மலேசியாவும் சிங்கப்பூரும் வலியுறுத்தியிருந்தன.

இதற்கிடையில், சிங்கப்பூரின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூவும், ஆசியான் முழுவதும் காட்டுத் தீயினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பிராந்திய ஒத்துழைப்பில் தமது நாடு பங்கேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.