இந்தோனேசிய காட்டுத் தீ: உதவிக்கரம் நீட்ட மலேசியா தயார்

18 செப்டெம்பர் 2026, 1:56 AM
இந்தோனேசிய காட்டுத் தீ: உதவிக்கரம் நீட்ட மலேசியா தயார்

ஜகார்த்தா, செப்.18: இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டிற்கு உதவ மலேசியா அதிகாரப்பூர்வமாக முன்வந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்ட பாம்பார்டியர் CL-415MP தீயணைப்பு விமானம் உட்பட மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 52 அதிகாரிகள், பணியாளர்களை அனுப்ப மலேசியா தயாராக இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவுக்கு நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வப் பணிநிமித்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள அஹ்மட் சாஹிட், அந்நாட்டு துணை அதிபர் கிப்ரான் ரகாபுமிங் ராகாவுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த உதவியை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி முடிவு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அந்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தோனேசியாவின் கலிமந்தான் மற்றும் சுமத்ரா பகுதிகளில் ஏற்படும் திறந்தவெளி தீவைப்புகளால் காட்டுத்தீ ஏற்பட்டு, அதன் தாக்கமாக உருவாகும் புகைமூட்டம் மலேசியாவையும் பாதிப்பதாக அஹ்மட் ஸாஹிட் சுட்டிக்காட்டினார்.

இந்த உதவி இந்தோனேசியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நோக்கத்தைக் கொண்டதல்ல. அண்டை நாடுகளையும் பாதிக்கும் எல்லைதாண்டிய புகைமூட்டப் பிரச்சனையை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சியாகவே இது அமையும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஒவ்வோர் ஆண்டும் காட்டுத்தீ மற்றும் புகைமூட்டப் பிரச்சனை ஏற்படுவதைத் தொடர்ந்து அதற்கு பதிலளிப்பதைக் காட்டிலும், அது ஏற்படுவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டம் அல்லது உத்தியை உருவாக்குவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்தகைய தடுப்பு நடவடிக்கைத் திட்டம் மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளின் நலன்களுக்கும் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.