கோலாலம்பூர், அக். 19 – எல்லை தாண்டிய புகைமூட்டத்திற்கு காரணமான காட்டுத் தீயைக் கையாள்வதில் இந்தோனேசியாவிற்கு உதவ மலேசியா தொடர்ந்து தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் நிலவரத்தைத் தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் மலேசிய மக்களின் சுகாதாரமும் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, சில மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் பள்ளிகள் மூடப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய அரசாங்கம் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தப் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களையும் பல்வேறு வான்வழி உபகரணங்களையும் களமிறக்கியுள்ள முயற்சியையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தீ பரவியுள்ள பகுதிகளின் பரப்பளவு அதிகமாக இருப்பதுடன், வானிலை நிலவரமும் சீரற்றதாக இருப்பதால், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எளிதானவை அல்ல என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

எல்லை தாண்டிப் பரவும் புகைமூட்டப் பிரச்சனையை எதிர்கொள்வதற்கு இரு நாடுகளும் தங்களது பொறுப்புகளையும் கடமைகளையும் பகிர்ந்துகொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.
மேலும், புகைமூட்டப் பிரச்சனையை எதிர்கொள்வதில் நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, தயார்நிலை மற்றும் கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆசியா அளவில் ஒத்துழைப்பு வழிமுறை ஒன்றை மலேசியா முன்மொழிந்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் மூலம், எல்லை தாண்டிப் பரவும் புகைமூட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான நாடுகளின் கூட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.







