சாலை கட்டணத்தை செலுத்தாத வாகனங்களால் ஆண்டுக்கு RM20,000-க்கும் மேல் இழப்பு

23 அக்டோபர் 2026, 10:00 AM
சாலை கட்டணத்தை செலுத்தாத வாகனங்களால் ஆண்டுக்கு RM20,000-க்கும் மேல் இழப்பு

காராக், அக்.23 — கோலாலம்பூர்–காராக் நெடுஞ்சாலை மற்றும் முதல் கட்ட கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலை ஆகியவற்றை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு சாலைக் கட்டணம்/ டோல் கட்டணம் செலுத்தாமல் நெடுஞ்சாலைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் முறைகேடுகளால் ஆண்டுக்கு 20,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பு ஏற்படுகிறது.

இந்த நெடுஞ்சாலைகளின் செயல்பாட்டையும் சலுகை உரிமையையும் நிர்வகிக்கும் AFA Systems and Services Sdn Bhd நிறுவனத்தின் பொது மேலாளர் இஸ்மலிசா இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

நிறுவனத்தின் பதிவுகளின்படி, ஆண்டுக்கு சுமார் 3,000 சாலை சாவடி முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு எட்டு சம்பவங்கள் பதிவாகின்றன என அவர் கூறினார்.

இதனைக் கட்டுப்படுத்த மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் மலேசியக் காவல்துறையுடன் (PDRM) இணைந்து அமலாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்மலிசா தெரிவித்தார்.

கராக் சாலைக் கட்டண சாவடியில் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வகை 1 வாகனங்களே சுங்கக் கட்டணம் செலுத்தும் விதிமுறைகளை அதிகளவில் மீறுவதாக நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன. அதாவது மொத்த விதிமீறல்களில் 95 விழுக்காடு வகை 1 வாகனங்களால் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக, வகை 2 வாகனங்கள் 1.9 விழுக்காட்டையும், வகை 3 வாகனங்கள் 1.3 விழுக்காட்டையும் பதிவு செய்துள்ளன.

சாலைக் கட்டண சாவடியில் முன்னால் செல்லும் வாகனத்தை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அந்த வாகனத்துடன் சேர்ந்து தடுப்புக் கம்பியைக் கடப்பதே அதிகமாகக் கையாளப்படும் முறைகேடாக உள்ளது.

இத்தகைய செயல்கள் மொத்த முறைகேடுகளில் 63 விழுக்காடு வரை இருப்பதாக இஸ்மலிசா குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை நடைபெற்ற அமலாக்க நடவடிக்கையின்போது, கராக் டோல் சாவடியில் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததாக அடையாளம் காணப்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த 37 வாகனங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. இந்த வாகனங்களால் ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்ட மொத்த இழப்பு 10,600 ரிங்கிட்டாகும்.

அவற்றில், ஒரு வாகனம் 27 முறை டோல் சாவடி விதிமீறலில் ஈடுபட்டு, 771.50 ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பதிவாகியுள்ளது. மற்றொரு வாகனம் அதிகபட்சமாக 44 முறை இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலும், அதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு 350.10 ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளது என்று இஸ்மலிசா சுட்டிக்காட்டினார்.

இந்த அமலாக்க நடவடிக்கையின் நோக்கம் நிலுவையில் உள்ள சாலைக் கட்டணங்களை மீட்டெடுப்பது மட்டுமல்ல, நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் கட்டண விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதும், அவற்றை மீறினால் எதிர்கொள்ளக்கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும்.

இதற்கிடையில், 1984ஆம் ஆண்டு தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள கூட்டாட்சி சாலைகள் சட்டத்தின் 8ஆவது பிரிவின்படி, டோல் சாவடி விதிமீறல் குற்றம் நிரூபிக்கப்படும் நபருக்கு குறைந்தபட்சம் 2,000 ரிங்கிட் முதல் அதிகபட்சம் 5,000 ரிங்கிட் வரை அபராதம்; மேலும், ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.