ஃபெடரல் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் பாதையின் உள்கட்டமைப்பை மறுஆய்வு செய்யக் கோரிக்கை

14 ஜூன் 2026, 3:35 AM
ஃபெடரல் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் பாதையின் உள்கட்டமைப்பை மறுஆய்வு செய்யக் கோரிக்கை

ஷா ஆலம், ஜூன் 14: ஃபெடரல் நெடுஞ்சாலையில் (Lebuhraya Persekutuan) உள்ள மோட்டார் சைக்கிள் பாதையின் உள்கட்டமைப்பு வசதிகள், தற்போதைய நவீன மோட்டார் சைக்கிள்களின் தேவைக்கும் அவற்றின் வேகத்திற்கும் ஏற்றதாக இல்லை என்பதால், இப்பாதையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இப்பாதையில் உள்ள சுரங்கப்பாதைகளின் (Tunnel) வடிவமைப்பு, வெளிச்சம் திடீரென மாறுவதால் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகப் புத்ரா மலேசியப் பல்கலைக்கழகத்தின் (UPM) சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத் தலைவர், அசோசியேட் பேராசிரியர் டாக்டர் லா டேக் ஹுவா தெரிவித்துள்ளார்.

வெளிச்சம் மிகுந்த பகுதியிலிருந்து திடீரென இருண்ட சுரங்கப்பாதைக்குள் நுழையும் போது, வாகன ஓட்டிகளின் கண்பார்வை சில நொடிகள் பாதிக்கப்படுவதாகவும், இது விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இப்பாதையில் மேற்கொள்ளப்படும் இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர் உயரமுள்ள சாலை மேம்பாட்டு வேலைகள் (Patching work), மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்திற்குத் தேவையற்ற அதிர்வை ஏற்படுத்துகின்றன.

இதனால், சாலையில் உள்ள குழிகள் அல்லது தடைகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போடும்போது, மோட்டார் சைக்கிளின் பிடிமானம் தளர்ந்து அவர்கள் நிலைதடுமாறி விழும் அபாயம் உள்ளதாக ஊடகங்களிடம் அவர் விவரித்தார்.

இதேபோன்ற கருத்தைப் பகிர்ந்து கொண்ட 'இக்காதான் சிலாதுராஹிம் பிரதர்ஹுட்' (Ikatan Silaturahim Brotherhood) அமைப்பின் நிறுவனர் அஸ்லான் சானி ஜவாவி அல்லது லெண்டோ ஜவாவி, இப்பாதை உண்மையில் மோட்டார் சைக்கிள்களுக்காகப் பிரத்தியேகமாகக் கட்டப்பட்டது அல்ல என்று குற்றம் சாட்டினார்.

ஆரம்பக் காலத்தில் இது மிதிவண்டிப் பாதையாக (Basikal) இருந்ததாகவும், பின்னரே மோட்டார் சைக்கிள்களின் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது என்றும் குறிப்பிட்ட அவர், இதனால் இதன் அசல் வடிவமைப்பு தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதைப் பொறியாளர்களே ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார்.

சாலையின் அசல் மேற்பரப்பை விட ஆங்காங்கே சற்று உள்வாங்கியுள்ள இரும்பு வடிகால் மூடிகள் (Grating), இப்பாதையை மேலும் ஆபத்தானதாக மாற்றுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து நீடித்து வரும் மின் கேபிள்கள் திருட்டுப் பிரச்சனையால், பல சுரங்கப்பாதைகளில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடப்பது இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக லெண்டோ கவலை தெரிவித்தார்.

எனவே, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக இரவு நேரங்களில் ஃபெடரல் நெடுஞ்சாலையின் முக்கியப் பாதையைப் பயன்படுத்தும் பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு உடனடியாகச் சம்மன் (Saman) விதிக்காமல், அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்களின் விவேகத்தைப் பயன்படுத்தி அவர்களைப் புரிந்துணர்வோடு நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.