கோலாலம்பூர், அக். 13 – கிராண்ட் சாகா நெடுஞ்சாலையின் 13.1ஆவது கிலோமீட்டரில் நேற்று நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் லாரி சம்பந்தப்பட்ட கோர விபத்தில், 23 வயது இளைஞர் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் சம்பவம் குறித்த தகவல்களைக் கொண்ட பொதுமக்கள் முன்வந்து உதவுமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோலாலம்பூரிலிருந்து காஜாங் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதே சாலையில் அங்கு சென்றுகொண்டிருந்த லாரியால், சாலையில் விழுந்த இளைஞரை தவிர்க்க முடியாமல் அவர் மீது ஏறியது. இதனால், சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் நஸ்ரோன் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்து, கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை நேரில் பார்த்தவர்கள், சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது தங்களது வாகனத்தின் டேஷ்கேம் (Dashcam) கேமராவில் விபத்து பதிவாகியிருப்பவர்கள் விசாரணைக்கு உதவுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்காக, விசாரணை அதிகாரி நூர் ஃபைசா முகமட் ஸாக்ரியாவை 012-326 8496 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மேலும், சாலைப் பயனாளர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளையும் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், வாகனங்களைச் செலுத்தும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.







