ஷா ஆலாம், ஆகஸ்ட் 28: மலேசியாவின் 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் (WCE) நாளொன்றுக்கு 150,000-க்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு, சிலாங்கூர் மற்றும் பேராக் இடையே சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், WCE-யில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

இதனை WCE நெடுஞ்சாலை நடவடிக்கைப் பிரிவின் தலைவர் பொறியியலாளர் சையட் முகமட் நகீப் தெரிவித்தார்.
ஆகையால், நெடுஞ்சாலைப் பயனர்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குறிப்பாக பிற்பகல் முதல் இரவு நேரம் வரையிலான உச்ச நேரங்களில் பயணிப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதனிடையே, விடுமுறைக் காலத்தில் நெடுஞ்சாலையில் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக WCE தனது செயல்பாட்டு தயார்நிலையை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்காக 24 மணி நேர நெடுஞ்சாலை ரோந்து நடவடிக்கைகளும் அவசரகால நடவடிக்கைப் படை, ERT-யின் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, போக்குவரத்து நிலவரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என WCE தெரிவித்துள்ளது.
பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிடுவதற்காக WCE செயலியைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
WCE நெடுஞ்சாலையில் அவசர உதவி தேவைப்படும் பயனர்கள், 24 மணி நேரமும் செயல்படும் WCE Infoline சேவையை 1700-81-6600 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.







