கோலாலம்பூர், அக். 20 – ரஹ்மா ரொக்க உதவி (STR) மற்றும் ரஹ்மா அடிப்படை உதவி (SARA) திட்டங்களின் மூலம், 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கிட்டத்தட்ட RM11 பில்லியன் நிதி விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் வரை STR திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாகப் பயனாளிகளுக்கு RM3.6 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் STR மற்றும் SARA திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள RM15 பில்லியன் நிதி, குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குப் பயனளிப்பதை அரசாங்கம் தொடர்ந்து உறுதிசெய்து வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு, மாதாந்திர அடிப்படையில் வழங்கப்படும் SARA உதவியைப் பெறுவதற்கு ஏறத்தாழ 90 லட்சம் மக்கள் தகுதி பெற்றுள்ளனர். அதேவேளையில், STR உதவித்தொகை தகுதியுடைய குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.
STR மற்றும் SARA திட்டங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு, உதவி பெறுவோரின் எண்ணிக்கை, உதவித்தொகை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, தகுதியானவர்களைச் சரியாகச் சென்றடைகிறதா மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உதவிகள் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் அமைச்சு இவ்விவரங்களை வெளியிட்டது.
STR மற்றும் SARA திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட RM15 பில்லியன் நிதி, எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது என்பது குறித்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஶ்ரீ முஹிடின் யாசின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
இதற்கிடையில், மாதாந்திர SARA உதவித் திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 99.7 விழுக்காடு பயன்பாட்டு விகிதம் பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு RM5.2 பில்லியனை எட்டியது.

அதேவேளையில், SARA Untuk Semua திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உதவியைப் பயன்படுத்தி உள்ளனர். இது மொத்தப் பயனாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களைக் குறிக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட RM1.9 பில்லியனை எட்டியுள்ளதாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியது.







