ஷா ஆலாம், அக். 23 – சிலாங்கூர் அரசின் மெகா நியூட்ரிசெல் (NutriSel) ஊட்டச்சத்துத் திட்டத்தை, எஸ்.பி.எம். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி அஹ்மட் அஸ்ரி சைனால் நோர் இதனைத் தெரிவித்தார்.

தேர்வுக்குத் தயாராகும் காலம் முழுவதும் மாணவர்களுக்குச் சத்தான உணவுகள் கிடைப்பதை உறுதிசெய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
அனைத்து எஸ்.பி.எம். மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு மதிய உணவு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
இத்திட்டம் நடைமுறைக்கு வரும் தேதி குறித்து சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

ஷா ஆலாம் சுல்தான் சலாவுடின் அப்துல் அஸீஸ் ஷா பள்ளிவாசலில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு எஸ்.பி.எம். மாணவர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அஹ்மட் அஸ்ரி இதனைத் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, அக்டோபர் 5ஆம் தேதி, நியூட்ரிசெல் திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தை மந்திரி பெசார் அறிவித்திருந்தார்.
இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்கள் குறித்து மாநில அரசு தற்போது மறுஆய்வு செய்து வருகிறது. மேலும், நீண்டகாலம் பயன்படுத்தக்கூடிய பால், ரொட்டி போன்ற உணவுப் பொருட்களைத் திட்டத்தில் சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தற்போதைய நியூட்ரிசெல் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் இத்திட்டம், நவம்பர் மாதத் தொடக்கம் வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மாதாந்திர குடும்ப வருமானம் RM2,000க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1,04,640 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.







