கோலாலம்பூர், செப் 2 : நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போன 54 மலேசியர்களின் நிலை தொடர்பில், அந்நாட்டுப் பிரதமருடன் அணுக்கமானத் தொடர்பில் இருந்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் தமது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் ஒரு தெளிவான முடிவு கிடைப்பதை உறுதி செய்ய, தேவையான உதவிகளை வழங்குமாறு நேபாள அதிகாரிகளின் ஒத்துழைப்பை தாம் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
"நான் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளார் "
"மரணத்தை அதிகாரப்பூர்வமாகச் சட்டப்பூர்வமாக அறிவிப்பதற்குக் கடுமையான விதிமுறைகளின்படி மலேசியாவில் ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆகும்.
ஆனால் நேபாளத்தில் அது மூன்று ஆண்டுகள் ஆகும். இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் சட்டத்துறைத் தலைவரிடம் கேட்டுள்ளோம் .
"இருப்பினும், இந்தச் செயல்முறையை விரைவுபடுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைந்து முடிவு கிடைக்க அவர் முழு ஒத்துழைப்பு தருவதாக எனக்கு உறுதியளித்துள்ளார்," என்று பிரதமர் கூறினார்.
சுங்கை பெசியில் உள்ள அரச மலேசிய விமானப் படைத் தளத்தின் முன்னாள் பணியாளர் குடியிருப்புகளைப் பார்வையிட்ட பிறகு அன்வார் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, நேபாள வெள்ளத்தில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட 55 மலேசியர்களில் ஒருவர் இன்று பாதுகாப்பாக மலேசியா திரும்பினார் .
வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றிய விபரங்கள் தெரியாததால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 28) பிரதமர் அன்வாரின் தலையீட்டைக் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







