கோலாலம்பூர்,செப் 29: நேபாள வெள்ளப் பேரழிவில் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கும் 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக வீட்டுக் கடன், வாகனக் கடன், காப்பீடு மற்றும் இதர நிதிப் பொறுப்புகளைத் தற்காலிகமாக ஒத்திவைக்கும் 'மொரட்டோரியம்' (Moratorium) போன்ற ஒரு சிறப்புத் திட்டத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
'மலேசியா சொலிடாரிட்டி: பேமிலிஸ் இன் ஹோப்' (MASFIH) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மணிவண்ணன் இரத்தினம் அந்த கோரிக்கையை முன் வைத்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் சட்டப்பூர்வ நிலை (legal status) இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி மற்றும் சட்டச் சிக்கல்கள் குறித்து விவாதிக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) மற்றும் மலேசிய மத்திய வங்கி (Bank Negara Malaysia) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை விஸ்மா புத்ராவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், இன்றுவரை அதுகுறித்த எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
அதே வேளையில், நேபாளம் மற்றும் சீன அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் - மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் மலேசிய அரசுக்கும் அதன் அமைப்புகளுக்கும் MASFIH அமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று திபெத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக லெண்டே கோலா (Lhende Khola) ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1,450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் கண்டுப் பிடிக்கப்படாமல் உள்ளனர்.








