ஷா ஆலாம், அக். 21 – நாடு முழுவதும் 20 பகுதிகளில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசுக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. அவற்றில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பகுதிகளும் அடங்கும்.
மலாக்காவின் புக்கிட் ரம்பாய் பகுதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 170 என்ற காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
சிலாங்கூரில் கிள்ளான் பகுதியில் காற்று மாசுக் குறியீடு 161 ஆகப் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜோஹான் செத்தியாவில் 160, பந்திங்கில் 157, பெட்டாலிங் ஜெயாவில் 156 மற்றும் ஷா ஆலாமில் 154 என்ற அளவிலும் பதிவாகியுள்ளது.

கோலாலம்பூரில் செராஸ் பகுதியில் காற்று மாசுக் குறியீடு 157 ஆகப் பதிவாகியுள்ள நிலையில், பத்து மூடா பகுதியில் 155 என்ற அளவு பதிவாகியுள்ளது. புத்ராஜெயாவில் காற்று மாசுக் குறியீடு 156-ஆக உள்ளது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் காற்று மாசுக் குறியீட்டின் தற்போதைய நிலவரத்தைக் கண்காணித்து, தங்களது உடல்நலத்தைப் பாதுகாக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.







