ஷா ஆலாம், அக். 20 – பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பகடிவதை சம்பவங்களைக் கண்டறிவதற்குப் புகார் அளிக்கும் வழிமுறையாகக் கியூஆர் குறியீட்டை (QR Code) பயன்படுத்துவது பெரிதும் உதவக்கூடும் என்று குற்றவியல் ஆய்வாளர் கமால் அஃபாண்டி ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
இந்த முறை மூலம், மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களைப் பொறுப்பான தரப்பினரிடம் எளிதாகத் தெரிவிக்க முடியும்.
குறிப்பாகப் பள்ளி நேரத்திற்கு வெளியேயும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களிடையே மோதல் அல்லது சண்டை ஏற்படுவதற்கான திட்டங்கள் பல நேரங்களில் சம்பவம் நிகழ்வதற்கு முன்பே மற்ற மாணவர்களுக்குத் தெரிந்துவிடுகின்றன.
இருப்பினும், பொருத்தமான புகார் அளிக்கும் வழிமுறை இல்லாத காரணத்தால், இத்தகைய தகவல்கள் பள்ளி நிர்வாகத்திற்குச் சென்றடையாமல் போகலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தும் ‘Safe to Tell Malaysia’ முன்னெடுப்பை அவர் குறிப்பிட்டார்.
மீடியா சிலாங்கூரின் ‘Bicara Semasa’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது மட்டுமே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் போதுமானதல்ல என்றும் வலியுறுத்தினார்.

கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் மூலம் பதிவாகும் காட்சிகளை முறையாகக் கண்காணிக்கும் நடைமுறை இல்லாவிட்டால், அச்சுறுத்தல்களையும் சம்பவங்களுக்கான ஆரம்ப அறிகுறிகளையும் கண்டறிவது சவாலாகவே இருக்கும் என அஃபாண்டி ஹாஷிம் குறிப்பிட்டார்.
பகடிவதைப் பிரச்சனையைக் கையாள்வதில், சம்பவம் நிகழ்ந்த பின்னர் யாரைக் குற்றம் சாட்டுவது என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் பிரச்சனைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்காக, பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினர் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம்.

இந்நிலையில், ஜோகூரில் யோங் பெங்கில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி 16 வயதுடைய ஐரீன் சோஃபியா முகமட் கைரூல் ஃபைசால் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 16 வயதுடைய ஆண் மாணவர் ஒருவர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டார். எனினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இச்சம்பவம், பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான நடைமுறைகள் மற்றும் புகார் அளிக்கும் வழிமுறைகள் எந்த அளவுக்குச் செயல்திறனுடன் உள்ளன என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.






