புக்கிட் மெர்தாஜாம், ஆக. 29: அறிவாற்றல் மிக்க மற்றும் உயர்ந்த ஒழுக்கநெறிகளைக் கொண்ட தலைமுறையை உருவாக்கும் முயற்சியில், பள்ளிகளில் பகடிவதை கலாசாரத்திற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளில் நிலவும் பகடிவதை, பிறரை அவமதித்தல், இழிவுபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான நடத்தைகளையும் முற்றாக நிராகரிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பள்ளிப் பருவத்திலேயே இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இல்லையெனில், இது மாணவர்களின் பிற்கால வாழ்க்கையிலும் தொடரக்கூடும்.
குறிப்பாக எதிர்காலத்தில் நாட்டின் தலைமைப் பொறுப்புகளை ஏற்கக்கூடியவர்கள் மத்தியிலும் இத்தகைய மனப்பான்மை உருவாகாமல் இருப்பது அவசியம் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பள்ளிகளில் ஒழுக்கம், மரியாதை மற்றும் பிறரை மதிக்கும் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தோல் நிறம் அல்லது பிற அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரை இழிவுபடுத்துதல், பாகுபாடு காட்டுதல் போன்ற செயல்களும் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி என்பது சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டுமில்லை. நல்ல பண்பாடு, உயர்ந்த ஒழுக்கநெறி, மற்றவர்களை மதிக்கும் மனப்பான்மை மற்றும் மனிதநேயத்துடன் கூடிய தனிநபர்களை உருவாக்குவதும் கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.







