1,200க்கும் மேற்பட்ட மாணவர் ஒழுங்கீனச் சம்பவங்கள்; பள்ளி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

3 செப்டெம்பர் 2026, 2:10 AM
1,200க்கும் மேற்பட்ட மாணவர் ஒழுங்கீனச் சம்பவங்கள்; பள்ளி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ஷா ஆலாம், செப். 3: சிலாங்கூரில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை பகடிவதை மற்றும் பல்வேறு மாணவர் ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பாக 1,200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை, பள்ளிகளின் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் தற்போது மாணவர் பகடிவதை பிரச்சனையைத் தாண்டி பல்வேறு தீவிரமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளதை வெளிப்படுத்துகிறது.

பதிவான 1,219 சம்பவங்களில் 265 சம்பவங்கள் பகடிவதை தொடர்பானவை ஆகும்.

மேலும் 954 சம்பவங்கள் பல்வேறு வகையான மாணவர் ஒழுங்கீனச் செயல்களை உள்ளடக்கியவை என புக்கிட் அமான் காவல்துறையின் குண்டர் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த உதவி காவல் கண்காணிப்பாளர் யுஸ்மார் யாடி சலிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 41 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது விசாரணைகள் பகடிவதை சம்பவங்கள் தொடர்பானவை ஆகும்.

மாணவர்களிடையே இடம்பெறும் சண்டைகள், குண்டர் கும்பல் நடவடிக்கைகள், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் எதிர்காலத்தில் குற்றச் செயல்களாக உருவெடுக்கும் சாத்தியம் கொண்ட ஒழுங்கீன நடவடிக்கைகள் ஆகியவை காவல்துறையின் முக்கியக் கவனத்தில் உள்ளதாக யுஸ்மார் தெரிவித்தார்.

சாதாரண மாணவர் ஒழுங்கீனச் செயல்கள் படிப்படியாக தீவிரமான வன்முறை சம்பவங்களாக மாறி வருவது கவலையளிக்கும் நிலையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பள்ளிகளில் பாதுகாப்பு ஸ்கேனர் இயந்திரங்களைப் பயன்படுத்துவது கத்திகள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கண்டறிவதற்கு உதவியாக இருக்கும் என்றாலும், அது மட்டுமே பள்ளிப் பாதுகாப்புக்கான முழுமையான தீர்வாக அமையாது.

பள்ளிகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கண்காணிப்பு கேமராக்கள், நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளைக் கண்காணிக்கும் நடைமுறைகள், வழக்கமான ரோந்துப் பணிகள், மனிதர்களின் நேரடி கண்காணிப்பு மற்றும் தகவல் பகிர்வு ஆகியவையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று யுஸ்மார் கூறினார்.

மேலும், பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் காவல்துறைக்கு இடையே தகவல்கள் விரைவாகப் பகிரப்படுவது, பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.