புத்ராஜெயா, அக் 20 : அண்மையில் ‘ஐ-பியூச்சர்’ (i-Future) நிகழ்ச்சியின் போது ‘கடினமான’ கேள்வி ஒன்றை எழுப்பியதன் மூலம் இணையத்தில் வைரலான மாணவிக்கு எதிராக, உயர்கல்வி அமைச்சோ மலாயா பல்கலைக்கழகமோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.
மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் சமூக ஊடகங்களில் அந்த மாணவிக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும், அவமானங்களையும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறினார்.
மாணவர்களின் பேச்சுரிமையை மதிக்க வேண்டும் என்பதில் தனது நிலைப்பாடு தெளிவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 1971 -ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டத்தில் (AUKU) செய்யப்பட்ட திருத்தங்கள் மாணவர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான இடத்தை வழங்கியுள்ளதாகத் தனது டிக்டாக் (TikTok) பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ள அறிக்கையில் சம்ரி தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சுதந்திரம் பொறுப்புடனும், கண்ணியத்துடனும், உண்மைகளின் அடிப்படையிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, ‘ஐ-பியூச்சர்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் போது, மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதி ஒருவர் அங்கிருந்த குழுவினரிடம் மிகவும் உறுதியாகக் கேள்வி எழுப்பும் இரு நிமிடங்களுக்கும் மேலான காணொளி ஒன்று இணையத்தில் வைரலானது.
அந்த மாணவி, தலைவர்களின் நேர்மை குறித்த கவலைகளை வெளிப்படுத்தியதோடு, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த பொதுமக்களிடம் நிதி திரட்டப்படுவதையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.






