கோலாலம்பூர், நவ 5- மலேசியாவின் மிக உயர்ந்த தரவரிசைப் பல்கலைக்கழகமாக, மலாயாப் பல்கலைக்கழகம் (UM) தொடர்ந்து 15வது இடத்தில் உள்ளது.
இது கடந்த ஆண்டின் 12வது இடத்தில் இருந்து சற்று குறைந்திருந்தாலும், அதன் நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கல்வி நற்பெயரில் 14வது இடத்திலும், முதலாளிகள் நற்பெயரில் 10வது இடத்திலும், சர்வதேச ஆராய்ச்சிக் கட்டமைப்பில் ஆசியாவில் நான்காவது இடத்திலும் UM வலுவாகச் செயல்பட்டுள்ளது.
இந்த QS தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 49 மலேசியப் பல்கலைக்கழகங்களில், 30 பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.
UM-ஐத் தொடர்ந்து, புத்ரா பல்கலைக்கழகம் (UPM) 22வது இடத்திலும், தேசியப் பல்கலைக்கழகம் (UKM) 24வது இடத்திலும், தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UTM) 25வது இடத்திலும், சயின்ஸ் பல்கலைக்கழகம் (USM) 34வது இடத்திலும் உள்ளன.
இதன் மூலம் நாட்டின் அனைத்து ஐந்து ஆய்வாளர் பல்கலைக்கழகங்களும் முதல் முறையாக ஆசியாவின் முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளன. டெய்லர்ஸ் பல்கலைக்கழகம் (27வது இடம்) மற்றும் UCSI பல்கலைக்கழகம் (30வது இடம்) போன்ற தனியார் பல்கலைக்கழகங்களும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன.
பிராந்திய அளவில், ஹாங்காங் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், பெக்கிங் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த தரவரிசையில், அல்-மதீனா சர்வதேசப் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களுக்கான பிரிவில் ஆசியாவில் முதலிடத்தையும், பெர்டானா பல்கலைக்கழகம் மாணவர்-ஆசிரியர் விகிதத்தில் இரண்டாவது இடத்தையும் பெற்று சிறப்பிடம் வகிக்கின்றன.




