கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 — 1971ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டமான AUKU-வை ரத்து செய்வது தொடர்பான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பை மலாயா பல்கலைக்கழகம் (UM) வரவேற்றுள்ளது.
அதேவேளையில், நாட்டின் உயர்கல்வித் துறைக்காக மேலும் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்க உயர்கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் UM தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இந்தச் சீர்திருத்தம் மிகவும் முக்கியமானதாகும் என UM துணைவேந்தர், பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் அஸுவான் அபு ஒஸ்மான் கூறினார்.
இதன் மூலம் தேசிய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் மதிக்கப்படும் தலைமுறையை உருவாக்க பல்கலைக்கழகங்களுக்கு மேலும் வலுவான அடித்தளம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாறிவரும் உயர்கல்விச் சூழலுக்கு ஏற்ப நாட்டின் உயர்கல்விச் சட்டக் கட்டமைப்பு தொடர்ந்து பொருத்தமானதாகவும் வலுவானதாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்த புதிய சட்டத்தின் நோக்கமாகும்.
இதன் வழி, உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தையும் பொறுப்புணர்வையும் சமநிலைப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்குத் தேவையான அறிவு, சிந்தனை மற்றும் தலைமைத்துவத் திறன்களை வளர்க்கக்கூடிய உயர்கல்வி அமைப்பை உருவாக்க முடியும் என UM தெரிவித்துள்ளது.






