சாலைப் பயண வழிகாட்டிற்கு 'துஜு' செயலியைப் பயன்படுத்த ஊக்குவிப்பு

20 அக்டோபர் 2026, 12:58 PM
சாலைப் பயண வழிகாட்டிற்கு  'துஜு' செயலியைப் பயன்படுத்த ஊக்குவிப்பு

கோலாலம்பூர், அக் 20 : சாலைப் பயண வழிகாட்டியாக, மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘துஜு’ (TuJu) கைபேசி செயலியை பயன்படுத்துமாறு பொதுமக்களை அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.

பிரபல வழிகாட்டி செயலியான ‘வேஸ்’ (Waze) இஸ்ரேலிய சட்டங்களுக்கு உட்பட்டது என்பதால், மலேசியக் குடிமக்களின் நடமாட்டம் குறித்த தகவல் மற்றும் தரவுகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த உள்நாட்டு மாற்றுச் செயலி பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற தேசிய இணைய பாதுகாப்பு குழுவின் மூன்றாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், பிரதமர் தமது முகநூல் பதிவில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களை ஆய்வு செய்வதற்காக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில், 2024 இணைய பாதுகாப்புச் சட்டத்தின் அமலாக்கம், மைடிஜிட்டல் ஐடி-யின் (MyDigital ID) பாதுகாப்புத் தன்மைகள் மற்றும் போஸ்ட்-குவாண்டம் கிரிப்டோகிராபி மூலம் குவாண்டம் கம்ப்யூட்டிங் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

குடிமக்களின் தரவு மற்றும் அடையாளங்களின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டார்.

எனவே, அரசாங்கம் மைகாட் மற்றும் மைடிஜிட்டல் ஐடி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓர் ஒருங்கிணைந்த அடையாளச் சூழல் அமைப்பை வலுப்படுத்தி வருவதாகவும், வருங்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வலுவான இணைய பாதுகாப்புகள் இதற்குத் துணையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.